ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கே தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. சிலவேளை, இறந்த பிறகே அப்பணம் அவர்களுக்கு கிடைக்கிறது என்று மத்திய மாகாணசபையின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் எம். சிவஞானம் விசனம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணசபைத் தலைவர் எல்.டி நிமலசிறி தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்கள் சுகமாக வாழ்கின்றனர் என்றா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் வாழ்க்கை இருள் சூழ்ந்தாக காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கை வந்து 200 வருடங்களை எட்டியுள்ள நிலையில் கடந்த முன்னைய காலங்கள் அவர்களுக்கு வசதியாக இருந்ததென்றே கூற முடியும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கான சுகாதார வசதிகள் காணப்பட்டன. தொழில் வாய்ப்பு காணப்பட்டது. அவர்களுடைய இருப்பிட வசதிகள் உறுதியாக இருந்தன. தற்போதைய நிலை மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. வீடு, காணிகள் இல்லை. சுகாதார சீர்கேடுகளும் கல்வி பின்தங்கிய நிலையிலும் உள்ளது. இன்று தோட்டத் தொழிலாளர் பிரச்சினை குறித்து பேசுவதற்கு ஆளுமில்லை.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திக்கூட்டுத்தாபனம், எல்கடுவ பிளாண்டேஷன் என யார் தோட்டங்களை பொருப்பெடுத்தாலும் தோட்டங்கள் காடுமண்டியே காணப்படுகின்றன. விஷ ஜந்துக்களுடன் போராடி தொழில் செய்ய வேண்டிய நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். அதிக எண்ணிக்கையான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் தோட்ட மக்களுக்கு தொழில்வாய்ப்பும் குறைந்துள்ளது. தேயிலையை வேறு தொழிற்சாலைக்கு அனுப்பும் போது தரகுப்பணம் பற்றிதான் நிர்வாகத்தின் கவனம் முழுமையாக உள்ளது. பெருந்தோட்ட தொழில் தொடர்பில் நுணுக்கம் தெரியாதவர்கள் அரசியல் செல்வாக்கினூடாக நிர்வாகத்தில் உள்ளனர். இதனால்தான் தோட்டங்கள் காடாகி போயுள்ளன.
தோட்டத்துரைமார் தோட்டக் காணிகளை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பிரித்துக்கொடுக்கின்றமையினால் தோட்டக் காணிகள் சுருங்கிவிட்டன. தோட்டத்தில் உள்ள பலாக்காயையோ, வாழைக்குலையையோ எடுக்கும் உரிமை தொழிலாளருக்கு கிடையாது. 1970களில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இந்தியா சென்ற பலர் இன்று அங்கு நல்ல நிலையில் உள்ளனர். நாட்டை வளமாக்க நின்றவர்களின் நிலையோ கேள்விக்குரியாகியுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகள் பிரித்து வழங்கப்பட்டு சிறு தோட்ட உரிமையாளர்களாக அவர்களை மாற்ற வேண்டும். அதுவே அவர்கள் வாழ்வுக்கு விடிவை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.