தனியார் போக்குவரத்து பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் குதித்துள்ளமையினால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
நேற்று (01) நள்ளிரவு தொடக்கம் ஆரம்பமான இப்பணிப்பகிஷ்கரிப்பில் பிரதான சங்கங்கள் கலந்துகொள்ளாமை விசேட விடயமாகும்.
போக்குவரத்து விதி மீறல்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தண்டப்பண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் சாரதிகள் இப்பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இப்பணிப்பகிஷ்கரிப்பிற்கு முச்சரக்கர வண்டிச்சாரதிகள், பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிகள் சங்கம் உட்பட பல சங்கங்களும் இணைந்துள்ளன என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் சம்மேளனத் தலைவர் ஸ்டெனலி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இப்பணிப்பகிஷ்கரிப்பினால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினையை தவிர்ப்பதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அதிகமாக பயன்பாட்டில் விடப்பட்டுள்ளதுடன் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக நடைபெறுமாயின் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மாணவர்களுக்காக விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிரிவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் நகரத்தை அண்மித்த பகுதிகளில் வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
எது எவ்வாறிருப்பினும் இன்று காலை (02) தமது கடமை நிமித்தம் செல்லும் மக்கள் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.