இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் தனியார் பேருந்து சங்கங்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு 6.56 சதவீத பேருந்து பயணக் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், இந்தத் தீர்மானத்தில் இணக்கமில்லை எனத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து சங்கங்கள அறிவித்தன.
இந்த நிலையில், போக்குவரத்துதுறை பிரதி அமைச்சருடன் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, நூற்றுக்கு 6.56 சதவீத கட்டண அதிகரிப்பை, நூற்றுக்கு 12.5 சதவீதமாக அதிகரிக்கவும், குறைந்தபட்ச கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிக்கவும் பிரதியமைச்சர் இதன்போது இணக்கம் தெரிவித்ததாக பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்தே, பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தைக் கைவிட தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கட்டண அதிகரிப்பு தொடர்பான புதிய யோசனை, அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன்போதே அனுமதி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.