ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, நாடுமுழுவதும் உள்ள அனைத்து தபால்துறை ஊழியர்களின் விடுமுறைகளும் இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவான சுற்றுநிரூபம், தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தபால் திணைக்களத்தின் பயிற்சி மத்திய நிலைய அதிகாரிகளும் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஆறு இலட்சத்து 10 ஆயிரத்து 514 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால்மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி நாளைய தினம் அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் உள்ள தபால்மூல வாக்காளர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதியும், நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால்மூல வாக்குப் பதிவை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகங்கள், தேர்தல் காரியாலயங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தபால்மூலம் வாக்குகளைப் பதிவுசெய்ய நவம்பர் மாதம் 4ஆம் திகதி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் வாக்குகளைப் பதிவுசெய்யாத தபால்மூல வாக்காளர்கள், நவம்பர் மாதம் 7ஆம் திகதி தாம் கடமையாற்றும் இடத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் தபால்மூல வாக்குப்பதிவை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.