மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் இறுதி தீர்வொன்றை வழங்க தாமதம் செய்வதால், இன்று இரவு நாடளாவிய ரீதியாக ‘தீப்பற்றிய இரவு’ என்ற எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட இடங்களில் ‘தீப்பற்றிய இரவு’ என்று எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, சைட்டம் எதிர்ப்பு மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளை மற்றும் மஹரகமவில் பிரதான போராட்டம் இடம்பெறும். புஞ்சி பொரளையில் ஆரம்பமாகும் எதிர்ப்பு பேரணி, கொழும்பை நோக்கி வந்தடையும்.
எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ஐந்து பாதைகளின் ஊடாக கொழும்பை வந்தடையும் வகையில், பாரிய வாகன பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் உறுதியான தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரையில் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே எச்சரித்துள்ளார்.