
தென்கொரியாவில் நேற்று (12) ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கையருக்கு பாதிப்பேற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தென்கொரியாவுக்கான இலங்கை தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசங்களில் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது என்றும் மேலதிக தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கவோ பெற்றுக்கொள்ளவோ தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை நாடுமாறும் அவர் கோரியுள்ளார்.
தென் கொரியாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பல்வேறு பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் சொத்து சேதம் தொடர்பான உத்தியோகப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நில அதிர்வினால் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கியோன்ஜூ பிரதேசத்தில் உள்ள 4 அணுசக்தி உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் தென்கொரியாவின் டைம்ஸ் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்கொரியாவின் தென்மேற்கு பிரதேசத்தில் முதலாவதாக 5.3 ரிச்டர் அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டுக்கு பின்னர் தென் கொரியாவில் ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வு இதுவாகும். இரண்டாவது நில அதிர்வின் பின்னர் அவ்விடத்துக்கு அண்மித்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக இரு மணித்தியாலங்களில் 22 தடவை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தென்கொரியாவின் யோனேப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
வேலைத்தளம்/ அத தெரண