
நாட்டின் ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டு எதிர்கட்சி என அனைவரும் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதை எதிர்த்து 38,000 தோட்டத் தொழிலாளர் தேங்காய் உடைக்கவுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பி ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் மே முதலாம் திகதி நடத்தப்படவுள்ள மே தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே மாத்தளை மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு தேங்காய் உடைத்து தமது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளனர் என்று அகில இலங்கை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வேலாயுதம் வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து இத்தேங்காய் உடைப்பு நடத்தப்படவுள்ளது.
நாவுல, அரங்கல தோட்டத்தில் கடந்த 22ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே வேலாயுதம் வீரசிங்கம் இதனை தெரிவித்தார்.
இன்று தோட்டத் தொழிலாளர் வாழ முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யார் ஆட்சி நடத்துவது என்பதை ஆராய அரசாங்கத்திற்கு இன்னும் காலமிருக்கிறது. நாம் இரண்டு பிரதான கட்சிகளிடமும் எம்மை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பேரணி நடத்துவது அர்த்தமற்ற செயல். தோட்டத் தொழிலாளர் பிரச்சினைக்கு தற்போதைய அரசாங்கம் பதில் வழங்கும் என்று நாம் இன்னமும் நம்புகிறோம். அதேபோல் ஏனைய தோட்ட தொழிற்சங்க தலைவர்களையும் நாம் சந்தித்தோம். அத் தொழிற்சங்க உறுப்பினர்களும் இம்முறை தொழிலாளர் தின பேரணிக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என்று தெரிவித்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்