இலங்கைத் தேயிலைக்கான சராசரி விலை கடந்த ஒக்டோபர் மாதத்தில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
ஃபோர்ப்ஸ் எண் வோக்கர்ஸ் தேயிலைத் தரகர்களின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி த பிஸ்னஸ் ஒன்லைன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைத் தேயிலையின் சராசரி விலை கிலோ 537 ரூபாய் 77சதமாக பதிவாகி இருந்த நிலையில், இது கடந்த ஒக்டோபர் மாதம் கிலோ 586 ரூபாய் 19 சதமாக அதிகரித்துள்ளது.
இதன்படி இலங்கைத் தேயிலையின் சராசரி விலையானது ஒரு மாதத்தில் 48 ரூபாய் 52 சதம் அதிகரித்திருக்கிறது.
ஆனால் தேயிலையின் சராசரி விலையானது கடந்த 2017ம் ஆண்டு ஒப்டோபர் மாதம் கிலோ 646 ரூபாய் 8 சதமாக நிலவிய போதும், இந்த ஆண்டு அது 59 ரூபாய் 89 சதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தாழ்நிலத் தேயிலையின் விலையைக் காட்டிலும் உயர் மற்றும் மத்தியத்தரைத் தேயிலைகளின் விலைகள் சரிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர் மற்றும் மத்தியத் தரைத் தேயிலையின் அதிகபடியான நிரம்பல் மற்றும் குறைந்த தரம் என்பனவே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
எனினும் தாழ்நிலத் தேயிலைக்கான சர்வதேச கேள்வி அதிகரிப்பால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.