தேயிலைத் தொழிற்சாலையில் அல்லலுறும் மலையக பெண்கள்!

தோட்டத் தொழிலாளர் என்றதும் எமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் தேயிலை மலைக்கு கூடை சுமந்து செல்லும் பெண்களைத்தான். ஆனால் தேயிலைத் தொழிற்சாலையிலும் பல பெண்கள் பணியாற்றுகின்றனர். அவர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் நினைத்துப்பார்க்கிறோம். அல்லது நினைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறோம்?

எஸ். சுமித்ரா, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வலப்பனை பிரதேச மகளிர் அணித் தலைவி. வலப்பனை தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக 24 வயதில் இணைந்துகொண்டார். கடந்த 21 வருடங்களாக தொழிற்சாலையில் பணியாற்றும் சுமித்ரா தொழில் ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக கூறுகிறார்.

தொழிற்சாலையில் இருந்து சுமார் அரை மணி நேரம் பயணிக்க வேண்டும் அவருடைய வீட்டுக்கு. தொழிற்சாலையில் கடமைகள் ஆரம்பிக்க வேண்டிய நேரம் காலை 3.00 மணி. அதிகாலை 2.00 மணிக்கே எழும்பும் சுமித்தரா தேநீரை அருந்தி விட்டு தொழிற்சாலைக்கு செல்லவேண்டும். ஆனால் போக்குவரத்து வசதிகளை தோட்ட நிர்வாகம் இது ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்கிறார் அவர்.

“அதிகாலை நேரம் என்பதால் மலையகத்திற்கே உரிய பனி, குளிர், மழை என்பவற்றை மீறி காட்டெருமை, மாடுகள், சிறுத்தை மற்றும் நாய்களின் தாக்குதல்களையும் தாண்டி பணிக்கு செல்லவேண்டும். துணைக்கு செல்வதற்கும் யாருமில்லையென்பதால் தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லவேண்டியுள்ளது.

இதற்கு முன்பிருந்த தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தது. எமக்கு போக்குவரத்தை வழங்கியது. அப்படி நாம் தனியாக சென்றாலும் அப்போதைய நிர்வாகி பொறுப்பானவர்களை கடிந்துக்கொள்வார். ஆனால் இப்போது எம்மை மனிதர்களாக கூட மதிப்பதில்லை. தொழிற்சாலையில் நாம் செய்யும் வேலையை 8 மணி நேரத்தில் மட்டுப்படுத்த முடியாது. பச்சை தேயிலை கொழுந்துகளை அரைப்பதுதான் என் பணி. எனவே அன்றைய தினம் கிடைக்கும் அனைத்து கொழுந்துகளையும் அரைத்த பின்னர்தான் வீடு செல்ல முடியும். முன்பெல்லாம் காலை 2.00 மணிக்கு வேலைக்கு வந்தால் 8.30 – 11.30 மணிவரை இரு மணி நேர இடைவேளை வழங்கப்பட்டது. இப்போது அப்படியில்லை. அவ்வாறு நாம் இரு மணி நேரம் எடுத்தால் வேலைநேரத்தில் குறைக்கப்படும். லீவு எடுப்பது என்பது குதிரைக்கொம்புதான். நோய்நொடியென்றால் மருந்து எடுக்கக்கூட லீவு வழங்கப்படாது. அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் அன்றைய நாள் சம்பளம் குறைக்கப்படும். எது நடந்தாலும் ​வேலைத்தான் முக்கியம் என்பது அவர்களின் கருத்து. முழு நாளும் உணவின்றி வேலை செய்தாலும் ஏனென்று கேட்க நாதியில்லை. மேலதிக கொடுப்பனவு மட்டும் வழங்குவார்கள்.

சுத்தமான குடிநீர் வசதி தொழிற்சாலையில் எங்களுக்கு இல்லை. எப்போதும் தூசியுடன் போராடுகிறோம். மூக்குக்கு கவசம் வழங்கப்படாது. அவர்கள் வழங்குவது இரு மாதத்தில் கிழிந்து விடும். அதற்குப் பின்னர் ஒன்றும் இல்லை. முக்கியமான யாரும் வருகிறார்கள் என்றால் மட்டும் தருவார்கள்.

எமக்கு எவ்வித சுகாதார வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. காலை சாப்பாட்டுக்கு முன்னர் கைகழுவ கூட போக நேரமிருக்காது. அசுத்த கைகளினாலேயே வீட்டில் இருந்து வரும் சாப்பாட்டை அவசரஅவசரமாக சாப்பிடுவோம். சாப்பிட்ட கையை கழுவவும் நேரமிருக்காது. நான் மகளிர் அணி தலைவி என்ற போதும் இவை தொடர்பில் கதைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அப்படியே எமது பிரச்சினைகள் தொடர்பில் கூறினாலும் அதற்கான தீர்வுகள் கிடைப்பதில்லை. தோட்டத் தலைவர் எப்போதுமே தோட்ட நிர்வாகம் பக்கம் சாய்ந்திருப்பதால் எமக்காக பரிந்துரைக்கவும் யாரும் இல்லை. எமது பிரச்சினைக்கு என்று தீர்வு கிடைக்குமோ” என கவலையுடன் தெரிவித்தார் சுமித்ரா.

ஆர்த்தி பாக்கியநாதன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435