தேயிலை தொழிற் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் அமுலாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை சென்.ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
தோட்டங்களை அபிவிருத்தி செய்வது தேயிலை தொழிலை நவீனப்படுத்துவது என்ற அக்கறை, பெருந்தன்மை, தோட்டம் கம்பனிகளிடம் கிடையாது. மாறாக எந்தளவுக்கு தொழிலாளர்களை நசுக்கமுடியுமோ அந்தளவுக்கு நசுக்குகின்றனர்.
இந்த பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களுக்கு முதலீடு செய்யவில்லை. தோட்டங்களை விட்டு செல்லுங்கள் என்றால் பெட்டி படுக்கையுடன் செல்லவே இவர்கள் தாயாராக உள்ளனர். தோட்டங்களில் தொழில் செய்வதற்கு பணியாளர்கள் குறைவாக உள்ளனர்.
இளைஞர்கள் மாற்று தொழில் தேடி செல்கின்றனர். இதில் தவறேதும் கிடையாது. புதிய தொழிநுட்ப ரீதியில் தோட்டங்களின் தேயிலை தொழிலை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
இதற்கமைய இந்திய பிரதமரின் மலையக விஜயத்தின் போது அவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலையூடாக நவீன தொழிநுட்ப முறையில் செய்யப்படும் தளபாட தொழில் தொடர்பில் கூறினார்.
இதை நமது நாட்டிலும் மேற்கொள்ளும் வகையில் தொழிநுட்ப உதவியாளர் ஒருவரை எமக்கு தாருங்கள் என கேட்டுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.