நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும், தொழிலாளர்கள் விடயத்தில் இந்தத் தேர்தலின் தாக்கம் எவ்வாறுள்ளது என்பது தொடர்பிலும், தொழிற்சங்க பிரமுகர்களிடமும், தொழிலாளர்களிடமும் ‘வேலைத்தளம்’ நேர்காணலை மேற்கொள்கின்றது.
இன்றைய நேர்காணலில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி இளையதம்பி தம்பையா எம்முடன் இணைந்து கொண்டார்.
கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?
பதில் – ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டு பெரிய கட்சிகளுக்கு சாதகமாண முறையில் இந்தத் தேர்தல் முறைமை அமைக்கப்பட்டது. எனினும், இத்தத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன பலவீனமடைந்துள்ளது. இந்தப் பலவீனமானது, மூன்றாவது சக்தியொன்றுக்கு (ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி) வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே அரசியல் ரீதியான விடயமாக உள்ளது.
கேள்வி – தேர்தலின் பின்னர் எவ்வாறான மாற்றம் குறிப்பாக தொழிலாளர்கள் தரப்பில் நிகழ வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில் – தொழிலாளர் வர்க்கத்தின் பலமான கட்சி என்று தற்போது ஒன்றில்லை. சில சில குழுக்களாகவே அவை செயற்படுகின்றன. இடதுசாரி கட்சிகள் அனைத்தும், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்திருந்தன.
மலையகத்தைப் பொறுத்தவரையில், தொழிலாளர்களின் யாவும் தொழிலாளர் கட்சிகளாக இல்லை. அவை யாவும், தொழிலார்களின் வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ வழங்கும் நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் தேர்தலானது, இலங்கை தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஒரு விமோசன அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது எனக் கூறமுடியாது.
கேள்வி – தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொழிலாளர் ரீதியாக உங்களுடைய எதிர்ப்பார்ப்பு என்ன?
பதில் – தொழிலாளர்களுக்கான ஒரு கட்சியாக இருக்கின்ற அரசியல் சூழ்நிலை தற்போது பலவீனப்பட்டுள்ளது. ஏனெனில், 1950 மற்றும் 60களிலிருந்த இடதுசாரிக் கட்சிகள் தற்போது பெரிய கட்சிகளுடன் சங்கமமாகியுள்ளன.
இந்த நிலையில், தொழிலாளர் வர்க்கம் செயலிழந்துள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவம் இருக்கும் எனக் கூறமுடியாது.
இந்தத் தேர்தலில் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு பொது இணக்கப்பாட்டுடன், மக்கள் அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கலாம். எனினும், இடதுசாரிக் கட்சி அதற்கான தொலைநோக்கு இல்லை.
இதேவேளை, பெரிய கட்சிகளை நம்பிக்கொண்டிருக்கும் அல்லது மாற்றம் ஏற்படும் என்ற எதிர்ப்பார்ப்புடனேயே மக்கள் இருக்கின்றனர்;.
ஒரு புதிய அரசியல் சூழ்நிலையை உருக்குவது என்ற விடயத்தில் மக்களிடையே நம்பிக்கையீனம் நிலவுகிறது.
என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.