தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். 1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிக்காகோவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சியின் மூலமாக தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட தினம் இதுவாகும்.

எனினும், தொழிலாளர்கள் இன்னும் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் அவற்றுக்காக போராடும் நிலை இன்றும் தொடர்வதே அவலமாக உள்ளது.

இலங்கையில் 1934 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினம் முதன் முறையாக கொண்டாடப்பட்டது. எனினும், 1952 ஆம் ஆண்டுதான் இலங்கையில் அரச தினமாக தொழிலாளர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இலங்கையின் தொழிலாளர்கள் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், சர்வதேச தொழிலாளர் தினம் இன்று தொழிலாளர் வர்க்கத்தின் நிலமையையும், அவர்களின் வாழ்வையும், உரிமையையும், அவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் துன்பங்களையும் பறைசாற்றுவதாக அமையவில்லை. மாறாக அரசியல் கட்சிகள் தமது அரசியல் பலத்தையும், செல்வாக்கையும், மக்கள் செல்வாக்கையும் வெளியுலகிற்கு எடுத்துக் காட்டும் அரசியல் நிகழ்வாகவே அமைந்துள்ளது.

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் முதல் சிறு அரசியல் கட்சிகள்வரை அனைத்துமே இதனையே செய்கின்றன. கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் அரசியல் கூட்டங்களே இன்றைய தொழிலாளர் தினத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்தக் கட்சிக் கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்துவந்து வெறும் வாக்குறுகளை வழங்கிவிட்டு, அதனை அன்றே மறந்து விடுவதே தொழிலாளர் தின வரலாற்றில் வாடிக்கையாக உள்ளது.

நாட்டின் அனைத்து பாகங்களிலும் தொழிற்சங்கத்தினரும், தொழிலாளர்களினதும் போராட்டங்கள் தொடருகின்ற நிலையிலேயே தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள மலையக தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கும் அதிகமாக பெருந்தோட்டத் துறையில் பணியாற்றியும், அடிப்படைச் சம்பளமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாமல், நாட்கூலிக்கு தொழில் செய்யும் அவலமே இன்றும் தொடர்கின்றது. எனினும், 770 ரூபா என்ற நாட்கூலி நிர்ணயம் செய்யப்பட்டாலும் கூட, தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி என்பதைக் காரணமாக குறிப்பிட்டு, 75 சதவீதத்திற்கும் குறைந்தளவான வேலை நாட்களை வழங்கி வெறும் 550 ருபாவையே நாட்கூலியாக வழங்கும் அவலம் தோட்டப் புறங்களில் தொடர்கின்றது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மலையகம் மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் பல மாதங்களாக் தொடரும் வெப்பமான காலநிலை விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முறையான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், விசேடமாக வடக்கு, கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக, அரசாங்க வேலைவாய்ப்பைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், அவர்களின் போராட்டங்களுக்கும் இன்னும் நிரந்தர தீர்வொன்று காணப்படவில்லை.

இவற்றுக்கு அப்பால், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்க எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிக்கு இடையில் நாடாளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அது மட்டுமன்றி, இலங்கை மின்சார சபை ஊழியர்கள், மேன் பவர் சங்கத்தினர், ரயில்வே திணைக்கள ஊழியர்கள் என பல்வேறு தொழிலாளர் வர்க்கத்தினரும் தமது உரிமைகளைக் கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நிலையிலேயே இன்றைய சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும், வென்றெடுக்கப்பட்டு அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழும் நாள் என்று உருவாகுமோ அன்றுதான் உண்மையான தொழிலாளர் தினமாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை இல்லை. போராட்டங்களுடன் தொடரும் தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கைக்கு விடிவு பிறக்குமா என்பதே மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435