தொழிற்சங்கங்களின் மர்ம முடிச்சு

ஏனைய தொழிற்றுறையினரும் மலையகத்தில் இருக்கின்ற போதிலும், மலையகம் என்றவுடனேயே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. இதற்குப் பல காரணங்களைக் குறிப்பிட முடியும்.

மலையகம் என்ற தனிப்பெரும் தேசிய இனமொன்று இந்நாட்டில் உயிர்த்தெழுவதற்கு, பெருந்தோட்டத் துறைக்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களே காரணம். ஆக, அடிப்படையிலேயே மலையகச் சமூகம் ஒரு தொழிலாளர் வர்க்கச் சமூகத்தினராக கட்டமைக்கப்பட்டதால், மலையகம் என்றவுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

மலையகம் என்றவுடன் எவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாதோ அதுபோல, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்று வரும்போது, தொழிற்சங்கங்கள் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியாது.

மலையக வரலாற்றில், தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இரண்டரக் கலந்துள்ளதால், தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாத நிலையுள்ளது.
தேசபக்தன் கோ.நடேசய்யர், இலங்கை – இந்திய சம்மேளனத்தை, 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதியன்று முறையாகப் பதிவு செய்து, தொழிற்சங்க வரலாற்றுக்குத் தொடக்கப் புள்ளி வைக்கிறார்.
மலையக மக்களின் நலனுக்காய், இதயச் சுத்தியோடு நடேசய்யரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொழிற்சங்க வரலாறு, மலையகத்தில் இன்று பாரிய வியாபாரமாக உருவெடுத்துள்ளது.

தொழிற்சங்கங்கள், மலையக மக்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பு என்கிற நிலையிலிருந்து எப்போதோ தவறிவிட்டன. தொழில் திணைக்களத்துக்கு வழங்கும் சாதாரண அடிப்படைத் தகவல்களைக் கூட, உள்நோக்கத்தோடு மூடிமறைத்து, தொழிலாளர்களை ஏமாற்றும் தொழிற்சங்கங்களை மலையகத்தின் மீட்பர்களாக எவ்வாறு கருத முடியும் என்கிற கேள்வி இயல்பாக உள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, செங்கொடிச் சங்கம் ஆகிய 6 தொழிற்சங்கங்களின் முக்கியமான சில தகவல்கள், தொழில் திணைக்களத்திடம் கோரப்பட்டன.

தொழில் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்ட சில பதில்கள் தெளிவில்லாமல் இருப்பதோடு, தொழிலாளர் தேசிய சங்கம், மலையகத் தொழிலாளர் முன்னணி ஆகிய தொழிற்சங்கப் பெயர்களில் விடப்பட்ட சில தவறுகள் காரணமாக, அந்தத் தொழிற்சங்கங்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

 

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தொடர்பில், தொழில் திணைக்களம் தெளிவில்லாதிருப்பதையும் தொழிற்சங்கங்களால் தொழில் திணைக்களத்துக்கு வழங்கப்படும் தகவல்கள் விஞ்ஞானபூர்வமற்ற தகவல்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
தொழில் திணைக்களம் வழங்கியிருக்கும் தகவல்களின் அடிப்படையில், 1940ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – இந்தியன் காங்கிரஸ், பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாற்றப்பட்டு, 1960ஆம் ஆண்டு தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழமையான வரலாற்றைக்கொண்ட தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழில் திணைக்களத்துக்கு வழங்கிவரும் தகவல்கள், முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. எனினும் இ.தொ.கா வழங்கியிருக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொரு வருடமும், சராசரியாக 4 ஆயிரத்து 871 பேர், அத்தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.
1958ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், அதே ஆண்டில்தான், தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இந்தத் தொழிற்சங்கமும், தொழில் திணைக்களத்துக்கு வழங்கியிருக்கும் தகவல்களும், முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. அதேபோல அத்தொழிற்சங்கத்தின் அங்கத்துவர்கள் எண்ணிக்கையும் பாதிக்குப் பாதியாகக் குறைவடைந்துள்ளன.

இலங்கைப் பெருந்தோட்டக் கூட்டமைப்பு, ஐந்து தொழிற்சங்கங்களைக் கொண்ட தொழிற்சங்கமாக இருப்பதாகக் குறிப்பிடும் தொழில் திணைக்களம், அத்தொழிற்சங்கம் தொடர்பிலான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட திகதியை மாத்திரமே வழங்கியுள்ளது.

இலங்கையானது, சுதந்திரம் பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே, செங்கொடிச் சங்கம் பதிவு செய்யப்பட்டுது என, தொழில் திணைக்களம் வழங்கியிருக்கும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழமையான ஓர் தொழிற்சங்கமாக இந்தத் தொழிற்சங்கம் இருந்தாலும், அங்கத்தவர்கள் எண்ணிக்கையில் இத்தொழிற்சங்கம் பின்னிற்கின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரு தொழிற்சங்கங்களுக்கும், கோடிக்கணக்கான சந்தாப் பணத்தை, தொழிலாளர்கள் செலுத்துவதாகவே தோன்றுகிறது. சந்தாப் பணம் தொடர்பான தகவல்களை, தொழில் திணைக்களம் வழங்க மறுத்துவிட்டதால், அது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களால் தொழில் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல்கள், ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களாக இல்லை. பெருந்தோட்டத் துறையில், சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் குறைவான தொழிலாளர்களே இருப்பதாகப் பெருந்தோட்டக் கம்பனிகள் குறிப்பிடுகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நேர்மையற்ற பெருந்தோட்டக் கம்பனிகளும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும், உண்மையான தகவல்களை வெளியிடுமென்றும் அந்தத் தகவல்கள் நம்பகமானவை என்றும் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது.

தகவலரியும் உரிமைச் சட்டத்தினூடாக வெளிவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொள்ளும் சந்தாப் பணம் தொடர்பான செய்திகளை, தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் மறுத்து வருவதோடு, உண்மையான தகவல்களை வெளிப்படுத்தாமல், திட்டமிட்டு ஏதோவொரு காரணத்துக்காக மறைத்து வருவதாகவே தோன்றுகிறது.
இதய சுத்தியற்ற தொழிற்சங்கங்களால், மலையகம் பாரதூரமான நிலைமையை நோக்கிப் பயணித்துக் கொண்டு வருகின்றது. பாரிய சவால்களை எதிர்நோக்கும் பெருந்தோட்டத் துறையால், அத்துறையை நம்பி வாழும் மலையக மக்களும் அவர்களின் கலை, கலாசார வாழ்வியல் முறையும், ஆபத்தான கட்டத்தில் இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

தொழிலாளர்கள் தொடர்பான உண்மையானதும் விஞ்ஞான பூர்வமானதுமான தகவல்கள் வெளிவரும் சந்தர்பத்தில் மாத்திரமே, மலையக மக்கள் நம்பியிருக்கும் பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிக்கொள்ள முடியும்.

பெருந்தோட்டத் துறை தொடர்பான முறையான ஆய்வுகளைச் செய்ய முன்வராத அரசாங்கங்களும், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள், ஏன் இத்தனை மர்மமானதாய் இருக்கின்றன என்பது, தொடர்பில் தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார்: மக்கள் தொழிலாளர் சங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகள், மலையகச் சமூகத்துக்கே உள்ள பிரச்சினையாகும். தொழிலாளர்கள் தொடர்பில் தொழிற்சங்கங்களாலும் பெருந்தோட்டக் கம்பனிகளாலும் வழங்கப்படுகின்ற தகவல்களில், பாரதூரமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் எதுவும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் தொழிற்றுறையான பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற எந்தவிதமான ஆய்வுகளையும், அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பில், பெருந்தோட்டத்துறை அமைச்சால் வருடாந்தம் வெளியிடப்படும் புள்ளிவிவரத் தரவுகள், பெருந்தோட்டக் கம்பனிகளால் வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதால், அதனை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதா, இல்லையா? என்பதில் முரண்பாடுகள் உள்ளன.

பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைத் தொழிற்சங்கங்கள் அதிகரித்துக் காட்டுக்கின்றனவா, அல்லது கம்பனிகள் குறைத்துக் காட்டுக்கின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது. கம்பனிகளால் வழங்கப்படும் எண்ணிக்கை பிழை என்றால், ஏன் அவர்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகிறார்கள்?
பெருந்தோட்டத் துறையானது, பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. இதனால், தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வு அவசியமானதாகிறது. அதனை, பெருந்தோட்டத் துறை சார்ந்த அமைச்சுகள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்.

தொழிற்சங்கங்கள் வழங்கும் தகவல்கள் சரியானவையா என்று, தொழில் ஆணையாளர் தேடிப்பார்க்க மாட்டார். அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் சந்தாப் பணத்தின் தொகையும் சரியாக இருந்தால், அவர்களுக்குப் போதும். அது தொடர்பில் ஆராய மாட்டார்கள்.

தொழிற்சங்க அங்கத்தவர்கள், கணக்காய்வு அறிக்கையை முறையாகக் காட்டுவார்கள் என்றால், தொழிலாளர் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. இதனால், தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு, ஆய்வு அத்தியாவசியமாகிறது.

அருள் லோரன்ஸ்: செயலாளர் நாயகம் -மலையக மக்கள் முன்னணி

பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்களில், தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் தொழிலாளர்களே அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்ற மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபை, அரச பெருந்தோட்டயாக்கம் ஆகிய நிறுவனங்களிலும் தனியாருக்குச் சொந்தமான 23 கம்பனிகளிலும், மொத்தமாகவே 1 இலட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்களே பணிப்புரிவதாக, பெருந்தோட்டத் துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியாக இருக்கும்போது, மலையகத்தில் இரண்டு பெரும் தொழிற்சங்கங்களுக்கு, இலட்சக்கணக்கான தொழிலாளர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று தொழில் திணைக்களத்தால் வழங்கப்பட்டிருக்கும் தகவல், விஞ்ஞானபூர்வமானது அல்ல.

ஆகவே, இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. மலையகத் தொழிலாளர் முன்னணிக்கு, 15 ஆயிரத்துக்கும் 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட உறுப்பினர்களே இருக்கிறார்கள். அதுபோல, தொழிலாளர் தேசிய சங்கத்துக்கும், சுமார் 30 ஆயிரம் அங்கத்தவர்கள் மாத்திரமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிவை.

தொழில் திணைக்களத்துக்கு, ஆரம்பக் காலங்களில் தொழிற்சங்கங்களால் வழங்கப்பட்ட தரவுகள், இன்னமும் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன.

மூலம்: தமிழ்மிரர்
ஊடகவியலாளர்: பா. நிரோஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435