தற்போதைய காலத்திற்கு அமைய தொழிற்சங்கங்கள் மறுசீரமைப்புடன் செயற்படாவிட்டால், முன்னோக்கி செல்வது கடினம் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்துள்ளார்.
அவர் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல்
கேள்வி – தொழிற்சங்கங்களின் நிலைமைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்பன தற்போதைய காலத்தில் எவ்வாறுள்ளது?
பதில் – தொழிற்சங்கங்கள் அரசியல் அடிப்படையில் இல்லாமல்; தொழிலாளர் நலன் என்ற அரசியல் அடிப்படையில் செயற்பட வேண்டும். ஒரு துறைகக்குள்ளே பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, தொழிலாளர்களை ஒரு நலன்புரி என்ற அமைப்பின் அடிப்படையில் தொழிலாளர்களை வைத்திருக்கும் நிலைமை உள்ளது.
மரணாதார சங்கம், கடன் வழங்கும் சங்கம் அல்லது ஏதேனும் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் நிலைமைக்கு தொழிற்சங்கங்கள் தாழ்ந்து போயுள்ளன.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் தங்களை மறுசீரமைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.
கேள்வி – தொழிற்சங்கங்கள் தொடர்பில் மக்கள் தற்போது எவ்வாறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர்?
பதில் – மக்கள் அல்லது தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை தொழிற்சங்கங்கள் என்ற அடிப்படையில் பார்ப்பதைத் தவிர்த்து, அரசியல் கட்சி என்ற நோக்கில் பார்க்கின்றனர். நாளாந்த நாட்டின் நிலைவரங்களை அறிந்துகொள்கின்ற அடிப்படையில் மக்கள் சரியான தொழிற்சங்கங்களை அடையாளம் கண்டு அதனுடன் அணிதிரள வேண்டும்.
கேள்வி – தற்போதைய அரசியல் சமூக சூழ்நிலைகளில் தொழிற்சங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளன? அவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது?
பதில் – தொழிற்சங்க இயக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் பலவீனப்பட்டுள்ள நிலையில் உள்ளது. போராட்டங்களினால் சாதிக்கக்கூடியவை எவை என்ற கேள்வி உள்ளது. பிரித்தானிய காலனித்துவ கட்டமைப்பின் கீழ் தொழிற்சங்கங்கள் உள்ளன. உலக நவ தாராளவாத முறைமையிலும், இலங்கை அரசாங்கததின் நவபாசிச அரச முறைமையிலும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பார்கள் என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
நவதாராளவாத பொருளாதாரத்தின்கீழ் தனியார் நிறுவனங்களுக்கு, முதலீட்டாளர்களுக்கு அல்லது தொழில் வவழங்குநர்களுக்கு அதிக பாதிகாப்பு உள்ளது. தொழிலாளர் சட்டங்கள் உள்ளபோதும், அதனை பலவீனப்படுத்துகின்ற நிலைமையே காணப்படுகிறது.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் தங்களை மறுசீரமைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். காலத்துக்கு ஏற்றவாறான நிலைமைகளுக்கு அமைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய நிலைமைகளில் முகங்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
இவை இல்லாதவிடத்து தொழிற்சங்கங்கள் முன்னோக்கி செல்வது முடியாத விடயமாகும்.