தொழிலாளர்களிடம் மார்ச் மாத சந்தாவை அறவிடாதிருக்க முடிவு – இ.தொ.கா

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்..

அத்துடன் அரிசு, மாவு, பருப்பு உட்பட 6 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதி தோட்டத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவக காரியாலயத்தில் 25.03.2020 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக நிவாரணப்பொதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக  குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்தப்பட்டியல் அரச அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும்.

அதேபோல் ச.தொ.ச. நிறுவனமானது லொறிகள் ஊடாகவே தோட்டங்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கின்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமும் லொறிகளில் சென்று மீன்களை விற்பனை செய்யவுள்ளது.

அரசால் வழங்கப்படும் நிவாரணப்பொதியை இலவசமாகவும், ஏனையவற்றை பணம் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது இடங்களில் கூட்டமாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களின் நலன்கருதியே அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, அதனை உரிய வகையில் பின்பற்றுமாறும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சில தோட்டங்களில் கம்பனிகள் தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்துவித சுகாதார வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என கூறியே மக்களிடம் கையொப்பம் திரட்டப்படுகின்றது. ஆனால், சில கம்பனிகள் எவ்வித ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கவில்லை. எனவே, கையொப்பமிட வேண்டாம் என தொழிலார்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சவக்காரம், கைகளை சுத்தப்படுத்தும் திரவம் உட்பட எல்லாம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவே வழங்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில கம்பனிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. மேலும் சில கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. எனினும், அடுத்த புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அது எமது மக்களுக்கு சார்பான தீர்மானமாகவே இருக்கும்.

சம்பள உயர்வை வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது இது தொடர்பில் கம்பனிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும்.” – என்றார்.

ஊடகவியலாளர் – க.கிஷாந்தன்

சந்தா பணம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்ட உத்தியோகபூர்வமான அறிவித்தல் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435