கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களை இன்று மூன்று அடி தூரத்தில் இருந்து கொழுந்து பறிக்கலாம் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமை வருத்தமளித்துள்ளதாக இலங்கை தோட்டச் சேவையாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சவுந்தராஜன் சந்திரமதன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நேரத்தில் தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கொருவர் 3 அடி தூரத்தில் நின்று கொழுந்து பறிக்க முடியும் என்று பெருந்தோட்டத் துறை அமைச்சர் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும். இத்தகைய அத்தியவசிய நேரத்தில் தோட்டச் சேவையாளர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர் பல தோட்ட ஊழியர்கள் தமது தங்க நகைகளை அடகு வைத்தே அத்தியவசிய பொருட்களை வாங்கிக்கொண்டுள்ளனர் என்றும் இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஊரடங்கும் நடைமுறையில் இருக்கும் போதே தோட்ட சேவையாளர்களை நாளை பணிக்கு வருமாறு சில கம்பனிகள் அழைத்துள்ளன. அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போக்குவரத்தும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுமா? இவ்வாறு அவசர அழைப்புகள் விடுத்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊரடங்கு சட்டம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று (23) வெளியிட்ட அறிக்கையில்,
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.
விவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.