தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் அறிவித்தது. அதனை பெற்றுக்கொடுப்பது அவர்களின் கடமையாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.
மஸ்கெலியாவின் பிரன்ஸ்விக் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் கூறவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான் கூறியது. அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அதன் பூரண ஆதரவை ஆரம்பத்தில் இருந்தே வழங்கி வருகிறது.
தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2500 சம்பள உயர்வை நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க பலத்தைக் கொண்டு தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்