
தொழிலாளர் சட்டங்களில் உள்ள பாதக தன்மைகளை நீக்கி, பல தொழிலராளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தில், அதிகாரிகளுடன் நேற்று (25) இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
அமைச்சின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, தொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் 38 வது சரத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு நிதி பங்களிப்புச் செய்யாதமை தொடர்பில் இதுவரையில் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாகவே வழக்கு தொடுக்கப்பட்டது.
நீதவான் நீதிமன்றங்களில் அதிகளவான வழக்குகள் நிலவுகின்றமை காரணமாக அந்த வழக்குகளை தொழிலாளர் தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைப்பதற்கு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.
இந்த சட்டத் திருத்தம் ஊடாக நேரடியாக தொழிலாளர் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் நிதியை அறவிட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்
இதேநேரம், இந்த சட்டத் திருத்தத்தில் தொழிலாளர்கள் தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவதை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மேற்கொள்ளவேண்டும் என்ற சரத்தை உள்ளடக்க வேண்டும்.
தற்போது அந்த சரத்து இல்லாதமை காரணமாக தொழில் வழங்குநர்கள் இந்த விடயத்தில் தப்பித்துக்கொள்ள கூடியதாக இருக்கின்றது.
எனவே, அந்த நிலைமையை மாற்றுவதற்கு ஒருவரை தொழிலுக்கு உள்ளீர்க்கும்போது, ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்திற்குள் தொழில் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாகின்றதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.