
தேசிய அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பினை எதிர்வரும் 14 நாட்களுக்குள் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்து தோட்ட தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதி யில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கான 100 ரூபா சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தியும் கூட்டு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியான இழுபறி நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் நேற்று (26) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தமிழ் முற்போக்கு முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போரட்டத்தின் போதே முன்னணியின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தொடர்பில் நாம் பொறுமை இழந்துள்ளோம். அந்தவகையில் இனியும் பொய்யான கதைகளை கூறி எமது மக்களை ஏமாற்றுவதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட முதலாளிமார் சம்மேளனங்கள் முயற்சிப்பதனை நிறுத்தி கொள்ளவேண்டும் என்றும் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இச் சத்தியாகிரக போரட்டத்தில் கூட்டணியின்தலைவரும சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜங்க அமைச்சர் வீ. இராதகிருஸ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், எம்.திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார் உட்பட மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.