கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடுமுழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பி;க்கப்பட்டுள்ள நிலையில், மறு அறிவித்தல் வரை தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணிமுதல் நாளை மறுதினம் திங்கட்கிமை காலை 6 மணிவரை நாடுமுழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுளளது.
இந்த நிலையில், தபால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் நிலை சுமூகமாகிய பின்னர் தபால் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் முதியோர் கொடுப்பனவும் நோய் நிவாரண கொடுப்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றிரவு தொடக்கம் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேநேரம், அதிவேக நெடுஞ்சாலைகளும் நேற்று மாலை முதல் ஊரடங்கு சட்ட காலப்பகுதிவரை மூடப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நேற்று மாலை 6 மணி தொடக்கம் அதிவேக வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.