தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால பணம் என்பன உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் சட்டத்தணியுமான க. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
தொழிலுறவுகள் அமைச்சர் டப்ளியு. டி. ஜே. செனவிரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் இரவீந்ர சமரவீர ஆகியோர் தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்ற தேசிய தொழில் ஆலோசனைசபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்கள் தோட்ட அபிவிருத்திசபை, ஸ்ரீலங்கா அரச பெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளாண்டேஷன் ஆகிய பெருந்தோட்டத்துறை நிர்வாக நிறுவனங்களின் கீழியுங்கள் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களே மேற்படி உரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்களில் தமது அந்திம காலத்தில் கொடுப்பனவுகளை பெறமுடியாத நிலையில் பெருங்கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வு காலத்தின் போது அவர்களுக்கு கிட்ட வேண்டிய உரிமைகள் இன்று மறுக்கப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது. இவர்களை போன்ற பலர் உரிய நிதி கிடைப்பதற்கு முன்னர் இறந்தும் உள்ளனர்.
மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் மக்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சு ஆவண செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தொழில் ஆலோசனைசபைக் கூட்டத்தில் அந்நிறுவனங்கள் எவ்வளவு தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது என்று தொழிற்சங்கங்களுக்கு அமைச்சு அறிவிக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் தோட்டக் காணிகள் வெளியாருக்கு வழங்க நிர்வாகம் முயற்சிக்கின்றமை கவலைக்குரியது. பரம்பரை பரம்பரையாக அத்தோட்டங்களில் அதனையே நம்பி வாழ்ந்து வருகிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தொழிலுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றும் சட்டத்தரணி பின்னர் தெரிவித்தார்.