தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி கொண்டாடுவோம் என மலையக தோட்ட தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபா சம்பள உயர்வு தமக்கு வழங்கப்படாது ஏமாற்றப்பட்டு விட்டதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளிகளுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா பெற்று தரப்படும் என தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
இருப்பினும் அந்த தொகை பெற்று கொடுக்கப்படாமல், மாறாக 730 ரூபாவே பெற்று கொடுக்கப்பட்டது.
அதுவும் தொழிலாளர்களின் பெறும் போராட்டங்களின் மத்தியிலேயே நிகழ்ந்தது.
இந்தநிலையில், தற்போது தீபாவளி முற்பணமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அந்த தொகை வழங்கப்படவில்லை எனவும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பரவலாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நாவலப்பிட்டி உனுகொட்டுவ தோட்ட தொழிலாளர்களும் அந்த குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி திருநாளை கறுப்பு தீபாவளியாக கொண்டாட போவதாக தெரிவித்தனர்.
சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.
தற்போது 18 கிலோவை தோட்ட நிர்வாகம் கோருகின்றன.
அந்த அளவை பெற்று கொடுக்கப்படாது விட்டால், நாள் ஒன்றுக்கு அரைநாள் பெயரே வழங்குகின்றனர்.
இதனால் தமது மாத வேதனம் 6 ஆயிரம் ரூபாவை தாண்டுவது இயலாத காரியமாக மாறியுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த வேதனத்துடன் தமது அன்றாட செலவு, பிள்ளைகளின் கல்வி, உணவு உள்ளிட்ட வாழ்வாதாக செலவுகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபா பெற்றுத்தருகின்றோம் என கூறிய தொழிற்சங்கவாதிகள் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என கேள்விகளையும் தொழிலாளர்கள் எழுப்பினர்.
எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.