தோட்டத் தொழிலாளர்களுக்கு முதலாளிமார் சம்மேளம் சம்பள உயர்வு வழங்க பின்வாங்கும் நிலையில் அவர்களுக்கான உரிய நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாக உபதலைவரும் பெருந்தோட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி கே. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 105ஆவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பங்குபற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தினூடாக நிர்ணயிக்கப்படுகிறது. தற்போதை எதிர்மறையான நிலைமையினால் சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளம் பின்வாங்குகிறது. வருமானமின்மை, தேயிலை விலை வீழ்ச்சி என்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது எவ்வாறு இருப்பினும் முதலாளிமார் சம்மேளனம் மக்களை கைவிடும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் கைகொடுக்க வேண்டும்.
இலங்கையில் 1992ஆம் ஆண்டு தொடக்கம் 22 தோட்டக் கம்பனிகளில் 1 லட்சத்து 92 ஆயிரம் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டு வருகின்றார்கள். எனினும் இவர்களது சம்பள உயர்வு ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்ச் 31இல் நிறைவடையும் பொழுது சம்பள உயர்வை புதிய கூட்டு ஒப்பந்தம் மூலமாக தீர்மானிக்க வேண்டியிருக்கின்றது.
எவ்வாறாயினும் இம்முறை 2015 மார்ச் 31 ஆம் திகதிக்கு பின்னர் இழுபறி நிலையிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது, தோட்ட தொழிலாளர்களை பெரும் அவதிக்குள் சிக்கவைத்துள்ளது.
இதற்கிடையில் உலக சந்தையில் தேயிலையின் விலையில் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விபரிக்கும் முதலாளிமார் சம்மேளனம், சம்பள உயர்வு வழங்க முடியாது என்று கைவிரிக்கின்றார்கள். இம்மாதிரியான சந்தர்ப்பத்தை சமாளிக்க அரசாங்கம் விசேட சட்ட விதிகள் கொண்டு வருவது அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும் அரச சேவை உத்தியோகஸ்தர்கள் நன்மை பயக்கும் வகையில் தொழில் பிணக்குச் சட்டத்தின் கூட்டு ஒப்பந்த முறையை அரச சேவையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தல் வேண்டும். இதைவிட தொழிற் சங்க சட்டத்தின் பிரகாரம் தொழிற் சங்க அங்கத்துவத்திற்கு 16 வயதை அடைந்திருக்க வேண்டும்.
ஆனால் ஒருவர் 14 வயது எல்லைக்குப் பின் தொழில் செய்ய முடியும். எனவே தொழில் சங்க சட்டத்தில் 14 வயதுக்குப் பின் தொழில் சங்க அங்கத்துவம் பெறுவதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
நடந்து முடிந்த சர்வதேச தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் 184 நாடுகளின் பிரதிநிதிகளும் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அங்கத்தினர்களும், பிரதிநிதிகளும், நிபுணர்களும் பங்கேற்றனர்.
இலங்கை தூதுக்குழுவின் சார்பில் இலங்கை தொழில் மற்றும் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன இம் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்