மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத் தக்க வலு சக்தி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேன்பவர் நிறுவனத்தைச் சேர்ந்த 37 ஊழியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேன்பவர் நிறுவனத்தினூடாக இலங்கை மின்சாரசபையில் பணியாற்றிய குறித்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு (24) கைது செய்யப்பட்ட குறித்த ஊழியர்கள் இன்று (25) நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, டெலிகொம் நிறுவனத்தைச் சேர்ந்து நிரந்தர மற்றும் மேன்பவர் நிறுவனத்தினூடாக பணியாற்றும் ஊழியர்களும் நேற்று (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கம்பனி வீதியினூடாக அலரி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணித்த அதேவேளை லோடஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமையினால் இப்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேன்பவர் நிறுவனத்தினூடாக குறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரிய போதும் நிரந்தர தீர்வு கிடைக்காமையினால் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.