மாதாந்த கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் சங்க உறுப்பினர்களினால் தலவாக்கலையில் 28.11.2019 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
‘கூட்டு ஒப்பந்தத்தை மீறாதே’ , ‘சேமலாப நிதியம்,சேமலாப சேவை நிதியம் ஆகியவற்றின் 25 சதவீதத்தினை உடனே வழங்கு’, ‘உடன் படிக்கைகளை மீறாதே’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்தியவாறே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலவாக்கலை, சென்.கிளாயர், பேரம், ட்ரூப் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 இற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.
”மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட 18 பெருந்தோட்ட கம்பனிகள் இணைந்து இம் மாதம் 06 ம் திகதி தோட்ட சேவையாளர் சங்கத்துடன் உடன் படிக்கை ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டது.
அதில் 25 சதவீத சம்பள அதிகரிப்பினை வழங்க இணைக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிக்கோ மற்றும் ரிச்சட் பீரிஸ் கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா, நமுனுகுல, கேகாலை உள்ளிட்ட பெருந்தோட்ட கம்பனிகள் இதனை கொடுப்பனவாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தன.
இதனை அடிப்படை சம்பளத்தில் சேர்க்காது சேமலாப நிதியத்துடன் வழங்கப்படும் ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அநீதி காரணமாக தோட்ட சேவையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி, அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வினை கொடுப்பனவாக அல்லாது அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த மாதம் 05 ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.” என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.