நுவரெலியா மாவட்ட அரச மருத்துவமனைகள் சிலவற்றில் தோட்ட மருத்துவ உதவியாளர்களை மலினப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரலியா மாவட்ட அரச மருத்துவமனைகள் சிலவற்றில் அரச மருத்துவர்களிடம் மாத்திரமே சிகிச்சை பெறவேண்டும் என்றவகையில் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, தோட்ட மருத்துவ உதவியாளர்களை மலினப்படுத்தும் அத்தகைய பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு மாவட்ட சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், இன்னும் பெருந்தோட்டப் பகுதி சுகாதார முறைமை பெருந்தோட்ட கம்பனிகளினால் நிர்வகிக்கப்படும் தோட்ட வைத்திய உதவியாளர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை மாற்றி அமைத்து பெருந்தோட்ட சுகாதார முறையை அரச பொது சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எமது மேற்பார்வை குழுவில் அதன் நடைமுறை வடிவத்தை தீர்மானிக்கும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று இன்று ( 16) இறுதி அறிக்கை சுகாதார அமைச்சருக்கு கையளிக்கப்படவுள்ளது.
விரைவில் பெருந்தோட்ட சுகாதார முறைமை அரச மயமாகும் இறுதி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இது மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் மிகமுக்கிய அடைவுகளில் ஒன்றாகும்.
இந்தநிலையில் நுவரலியா மாவட்ட அரச மருத்துவமனைகள் சிலவற்றில் அரச மருத்துவர்களிடம் மாத்திரமே சிகிச்சை பெறவேண்டும் என்றவகையில் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் அது தோட்ட மருத்துவ அதிகாரிகளை மலினப்படுத்துவதாகவும் தோட்ட மருத்துவ அதிகாரிகளிடம் இருந்து எனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக நுவரலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தலகலவுடன் நேற்று (15) காலை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உடனடியாக அத்தகைய பதாகைகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இதற்கு முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் அகரப்பத்தனை மாவட்ட வைத்தியசாலையில் இவ்வாறு நடந்து கொண்ட நிலையில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து எனது உத்தரவின் பேரில் அது அகற்றப்பட்டது. மீண்டும் இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பது சம்பந்தமாக எனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்ற சுகாதார மேற்பார்வை குழுவுக்கு அழைப்பு விடுக்குமாறும் குழுவின் செயலாளரை பணித்துள்ளேன்.
தோட்ட சுகாதாரம் தரம் குறைவானது என்பது நாடறிந்த உண்மை. எனவேதான் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் அதே சுகாதார வாய்ப்புகள் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் அடிப்படையில் அதனை தேசிய மயப்படுத்தும் பணியில் இப்போது வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் வகையில் ஏற்கனவே உள்ள குறைபாடுடைய தோட்ட சுகாதார முறையில் தங்கியிருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.
இந்த நிலையில் இவ்வாறு பதாகைகளை தொங்கவிட்டு தோட்ட சுகாதார முறைமையையும் அதனை மேற்கொள்ளும் மருத்துவ உதவியாளர்களையும் அவமரியாதைக்கு உட்படுத்துவது கண்டனத்துக்குரியது.
தோட்ட மருத்துவ முறைமையின் குறைபாட்டிற்கு மருத்துவ உதவியாளர்கள் காரணமல்ல. அந்த முறைமையே காரணம். குறைந்த வளங்கள் உடனான மருத்துவ முறைமையின் ஊடாக பல ஆண்டுகாலமாக தோட்ட மருத்துவ உதவியாளர்கள் வழங்கிய சேவையை நாம் மறுதலிக்க முடியாது. முறைமை மாற்றம் ஏற்படும்போது தோட்ட மருத்துவ உதவியாளர்களின் தொழில் உரிமைகள் பாதிப்படையாத வகையில் நாம் திட்டமிடலை மேற்கொண்டு வருகிறோம் எனவும் திலகராஜ் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.