நாடு பூராவும் உள்ள சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
தேயிலை விலையில் வீழ்ச்சி மற்றும் ஆண்டு தோறும் பெற்றுகொடுக்கப்படும் 15,000 ரூபா பசளை நிவாரண நிதி போதாமை என்பவை தொடர்பில் அறிந்திருந்த போதி்லும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வெதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட போவதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் லால் பிரேமநாத் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட முன்னர் ஐந்து இலட்சம் கையெழுத்துடன் பொது மனுவொன்று நாளை (22) ஆரம்பிக்கப்பட போவதாக தெரிவித்தார்.
மேலும் நாளை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தேயிலை உற்பத்தி எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என்பது தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளோம். கடந்த அரசாங்கத்தினால் 1300 சலுகை விலைக்கு பசளை வழங்கப்பட்ட போதிலும் அது தரமானதாக இருக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் 15,000 ரூபா வழங்கிய போதிலும் பசளையின் விலை 2900- 3000 வரை காணப்படுகின்றமையினால் குறித்த பணத்தினால் 5 மூட்டைகள் மட்டுமே விலைக்கு வாங்க முடிகிறது. ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு 12 மூட்டை பசளை தேவைப்படுகிறது. எனினும் தற்போதைய நிதிக்கமைய 5 மூட்டை மட்டுமே போட முடிகிறது.
ஒரு கிலோ தேயிலை கொழுந்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நாளாந்த பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி அவர் இவ்விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் நாடு பூராகவும் விநியோகிக்கப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்/ அத தெரண