பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சரியான கொள்கை அடிப்படையிலான தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு மாவட்டத்தில் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் எதிர்வரும் தேர்தலில் பெண் உறுப்பினர்களை தெரிவுசெய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (20) நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் 12 பெண் உறுப்பினர்களே உள்ளதாகவும், அது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 5 சதவீதமே என்பதால் விசேடமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும்போது அது தடையாக அமைந்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றம் என்பவற்றுக்கு 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவைத்தை பெற்றுக்கொள்ள முடிந்தாலும், குறித்த சதவீதம் பொதுத் தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்பதால் கட்சி தலைவர்கள் அதிக பெண்களை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன, இலங்கையில் 18 வயதை குறைந்த திருமண வயதாக மாற்றுதல், சிறுவர் விவாகங்களை தடுத்தல், பிறப்புச்சான்றிதழில் பெற்றோர் விவாகமானவரா என்ற நிரலை நீக்குதல், சொத்துக்களை மாற்றும்போது பெண் பிள்ளைகளை பொருட்படுத்தாமல் இருப்பதை தடுத்தல் போன்ற பல யோசனைகளை பெண் உறுப்பினர்களால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்க முடிந்ததாக தெரிவித்தார்.
விசேடமாக கடந்த ஜனவரி மாதத்தின் முதல் இரு வாரங்களில் மாத்திரம் நாட்டில் 142 பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகங்கள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்கள், 54 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்காக நடைமுறையிலுள்ள சட்டங்களை மறுசீரமைத்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் பெண் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசியலில் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமை, பெண்களை இழிவாக பார்த்தல் போன்றவை, கல்வியில் எவ்வளவு உயர்வடைந்தாலும் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும் போது பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுவதாகவும் இதனால் பொதுவாக ஒரு மாவட்டத்தில் ஒரு உறுப்பினர் வரும் வகையில் எதிர்வரும் தேர்தலில் பெண் உறுப்பினர்களை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்குமாறு பொதுமக்களிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமேதா ஜி. ஜயசேன, வைத்தியர் சுதர்ஷனி பெர்ணாண்டுபுல்லே, வைத்தியர் துசிதா விஜேமான்ன, ஸ்ரீயானி விஜேவிக்ரம, ரோஹிணி குமாரி விஜேரத்ன, விஜயகலா மகேஷ்வரன், ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்