ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு சென்றுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் பயிற்சி நெறி முடியும் போது பயிற்றப்பட்ட ஆசிரியராக மட்டுமன்றி கடனாளிகளாகவுமே பயிற்சி கலாசாலையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் இன்று வரை 6000 ரூபாவையே மாதாந்த கொடுப்பனவாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை மேலும் 10000 ரூபாவினால் அதிகரிக்கப் போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ள போதிலும் அமைச்சரவை உப குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆசிரியர் உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு 10000 கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் இவர்கள் கடந்த மே 30 ஆம் திகதியிலிருந்து தமது பயிற்சி நெறியை மேற்கொள்வதற்காக ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். தங்குமிடத்திற்காக 5 000 ரூபா முதல் 7 000 ரூபா வரையும் மாதாந்தம் செலுத்த வேண்டுமென்றும் மேலும் தாம் பயிற்சியை பெறும் போதும் மாதாந்தம் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும் குறிப்பிட்ட தொகை பணம் தேவைப்படுவதாகவும் ஆசிரியர் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு கலாசாலைக்கான சீருடைகளை கொள்வனவு செய்வதற்கும் பெருந்தொகை செலவானதாக தெரிவித்தனர்.ரூபா 6 000 கொடுப்பனவை பெற்றுக் கொண்டு 2 வருடகால பயிற்சி நெறியை எவ்வாறு நிறைவு செய்வது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
பயிற்சி நெறி முடியும் போது பயிற்றப்பட்ட ஆசிரியராக மட்டுமன்றி ஒரு கடனாளியாகவுமே பயிற்சி கலாசாலையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக் கப்படுகிறது.
வேலைத்தளம்/வீரகேசரி