ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேசிய முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதற்குரிய நிதியைப் பெறுவது தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அனைத்து மாகாண முதலமைச்சர்களின் 33 ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஹபரணை சினமன் வில்லேஜ் ஹோட்டலில் இடம் பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது தேசிய முகாமைத்துவ திணைக்களத்தினால் கிழக்கின் 4784 வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைக்கப்பெற்ற அனுமதி மற்றும் அது தொடர்பான விரிவான தரவுகள் அடங்கிய ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துடன் துரித கதியில் நிதியைப் பெற்றுத் தர ஆவண செய்ய வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுததுள்ளார்.
நிதி ஆணைக்குழுவின் செயலாளரை அழைத்த ஜனாதிபதி எதிர்வரும் வாரங்களில் கிழக்கு மாகாண சபையுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து விரைவில் நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறுபணிப்புரை விடுத்துள்ளார்.
பட்டதாரிகளின் விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்திரையாடியதுடன் அதன் போது அவர் இரண்டு வாரங்களில் இந்தப் பிரச்சினை தொடர்பில் சாதகமான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
இதையடுத்து பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி பிரதமரின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் தலைமையில் கிழக்கு முதலமைச்சர், கல்வியமைச்சர் மற்றும் மத்தியரசின் கல்வியமைச்சின் செயலாளர், நிதி ஆணைக்குழுவின் செயலாளர், தேசிய முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை இரண்டுவாரங்களுக்குள் வழங்குமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பிரதமரின் ஆலோசகர் இதன் போது பணிப்புரை விடுத்தார்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கல்விப் பணிப்பாளரினால் கிழக்கு மாகாணத்தின் முழுமையான வெற்றிடங்கள் அடங்கிய ஆவணங்கள் தேசிய முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நிதி ஆணைக்குழுவுக்கு ஆகியவற்றுக்கு கையளிக்கப்பட்டன.
கடந்த மேமாதம் 4 ஆம் திகதி தேசிய முகாமைத்துவ திணைக்களம் கிழக்கின் 4784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியமையை கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
நிதி ஆணைக்குழவின் அனுமதி தாமதமாகியமையையடுத்து முதலமைச்சர்களின் மாநாட்டில் ஜனாதிபதியை சந்தித்த கிழக்கு முதலமைச்சர் குறித்த நியமனங்களுக்கான நிதியை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய எதிர்வரும் வாரங்களில் நிதி ஆணைக்குழ மற்றும் முதலமைச்சருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இறக்காமம் மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டுள்ளமை மற்றும் அங்கு சிறுபான்மையினரின் காணிகளில் அத்துமீற முன்னெடுக்கப்படும் முஸ்தீபுகள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அது தொடர்பில் இறக்காமம் சிவில் சமூக பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட ஆவணங்களையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
தமிழ் வின்