பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வடக்கில் மூவாயிரம் பட்டதாரிகளுக்கான அரச நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரையில் ஆர்ப்பாட்டத்தை தொடர்வதென வடக்கு பட்டதாரிகள் சமூகம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது வடக்குக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆயிரம் அரச நியமனங்கள் வழங்குவதாக உறுதிளித்திருந்தார். இதனை தொடர்ந்து சுமார் எண்பது நாட்களுக்கும் மேலாக போராடி வரும் வடக்கு பட்டதாரிகள் போராட்டத்தை கைவிடுவதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து நியமனம் வழங்குவது உறுதி செய்யப்படும் வரையில் போராட்டத்தை தொடர்வது என்று தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் எமது பட்டதாரிகள் பிரதமரை கொழும்பில் சந்தித்தபோது ஆயிரம் நியமனங்கள் வழங்குவதாக தெரிவித்து இரு மாதங்கள் பூர்த்திடைந்தநிலையிலும் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நாம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். வடக்கில் உள்ள மூவாயிரம் பட்டதாரிகளுக்கு உடனடியாக நிரந்தர நியமனங்கள் வழங்க முடியாவிட்டால் முதலில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்து பின்னர் நிரந்தர நியமனம் வழங்கமாறு நாம் கோருகிறோம் என்று பட்டதாரிகள் சுட்டிக்காட்டினர்.