பசுமைக்குள் புதைந்து போன அடிப்படை உரிமைகள்

மலையகம்… பசுமையான மலைத்தொடர்கள்… குளிர்ந்த காற்று… கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைக்கம்பளம் விரித்தாற்போன்ற தேயிலைச்செடிகள்… அங்கு திருஷ்டி பொட்டிட்டாட் போன்ற சின்னச் சின்னக் கற்குன்றுகள்…. அவ்வப்போது தலைக்காட்டிச் செல்லும் காட்டுக்கோழிகளும் இதர பறவைகளும் விலங்குகளும் என அனைத்தும் இயற்கை அன்னை பார்த்துப் பார்த்து உருவாக்கியது போன்று அழகாயிருந்தாலும் அங்கு வசிக்கும் மக்களின் நிலைமை நினைத்தாற்போன்று இனிமையானதாக இல்லையென்பதே எம்மை பெருமூச்சிடச் செய்கிறது.

ஆம்… மேலைத்தேய நாடுகளில் பிரசித்திப் பெற்ற இலங்கை தேயிலையை உருவாக்க காரணகர்த்தாக்களாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் பசுமையிழந்தே உள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

மத்திய மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு, தனியாருக்கு சொந்தமான பன்வில,மடுல்கல உட்பட பல பிரதேசங்களில் அமைந்துள்ள பெருந்தோட்டங்களில் வசிக்கும் சுமார் 2100 பேர் தேயிலைத்தோட்டங்களில் கொழுந்து பறிக்க செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அந்தப் பெண்களில் சிலரை கண்டு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் போது அவர்கள் வௌியிட்ட பல விடயங்கள் மிகவும் கவலைக்குரியவை.

கொட்டும் மழையில் நனைந்தபடி கொழுந்து பறித்துக்கொண்டிருந்த அந்த பெண்களின் கவனம் முற்றுமுழுதாக கொழுந்து பறிப்பதிலேயே இருந்தது. மழையை அவர்கள் உணர்ந்தார்களா என எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. எனினும் மெதுவாக பேச்சுகொடுத்தபோது புன்னகை மாறாமல், கைவிரல் இயக்கங்களையும் நிறுத்தாமல் நான் கேட்டவற்றுக்கு பதிலளித்தனர்.

அவற்றின் தொகுப்பு வருமாறு,

“எட்டுமணி நேர வேலை எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணியாகும் போது எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மலைக்குச் செல்வோம். கால்நடையாகத்தான் செல்லவேண்டும். நான்கு மணி வரை வேலை செய்வோம். இந்த எட்டு மணிநேர வேலையில் எமக்கு இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்வதற்கான வசதிகள் அமைத்துக்கொடுக்கவில்லை. நாம் திறந்த வௌிகளில் யாரும் பார்க்கின்றார்களா என்ற அச்சத்துடனேயே அவற்றை செய்யவேண்டியுள்ளது. இந்த நவீன காலத்திலும் எமக்கான சுகாதார வசதிகளை செய்துக்கொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. அது மட்டுமல்ல. உட்கார்ந்து உணவு சாப்பிட வசதியில்லை. சாப்பிட முன்னர் கைகழுவுவதும் இல்லை, சாப்பிட்ட பிறகு கைகழுவுவதும் இல்லை. அதற்கான வசதிகள் இல்லை. இயற்கை உபாதையும் சுத்தமான உணவும் மனிதனின் அடிப்படை தேவை. அதுவே எங்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. மரநிழல்களில் அமர்ந்து அன்றாடம் உணவு உண்போம். வசதியுள்ளவர்கள் பொழுதைக்கழிக்க மலைப்பிரதேசங்களுக்குச் சென்று மரநிழல்களில் உணவுண்டு மகிழ்வார்கள். எமக்கு அன்றாட உணவே மரநிழலில்தான். மழைக்காலங்களில் அதை சொல்லவே தேவையில்லை. இயற்கை உபாதைக்கு தேயிலைக் காட்டை சிலர் பயன்படுத்துவதால் சாப்பிடும் போது வரும் துர்நாற்றம் பகலுணவை சாப்பிட விடாது செய்துவிடும். பெரும்பாலான நேரங்களில் பொலிதீன் துண்டுகளே மழைக்காலங்களில் குடையாக பயன்படுத்தப்படுகிறது.”

“சில நேரங்களில் நாம் இயற்கைத் தேவைகளுக்காக 2- 3 மீற்றர் தொலைவில் உள்ள வீடுகளுக்கே சென்று வருவோம். மாதச்சுழற்சி காலங்களில் நாம் எதிர்நோக்கும் அசௌகரியத்தை வார்த்தையில் கூற இயலாது. எட்டு முதல் 9 மணி நேரம் உடை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது. இதனால் குறித்த தினங்களில் பணிக்குச் செல்வதை பெரும்பாலான பெண்கள் தவிர்த்து விடுகின்றனர். இதனால் நாளாந்த சம்பளமும் இல்லாது போகிறது. அப்படியே மாதாந்த சம்பளத்தை நினைத்து பணிக்குச் சென்றால் பல்வேறு சுகாதார பிரச்சினைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக மறைவு பிரதேசங்களில் அலர்ச்சி போன்றவை ஏற்படுவதால் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது”

சிலர் கிட்டத்தட்ட பதினைந்து, இருபது வருடங்கள் இந்த தோட்டங்களில் வேலை செய்கின்றனர். ஆனால் இன்னமும் அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்படவில்லை. தமது பிரச்சினைகளை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியவர் பழிவாங்கப்படுவார். எங்களது இப்போதைய தேவையெல்லாம் வேலையை முடித்து விட்டு உட்கார்ந்து சாப்பிட ஒரு இடமும் இயற்கைத் தேவைகளுக்காக இரண்டு மூன்று மலசலகூடங்களும்தான். இதனை கவனத்திற்கொள்ளவேண்டும் என நாம் அரசாங்கத்திடமும் நிர்வாகத்திடமும் கோருகின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கும் பல துறைகளில் தேயிலை உற்பத்தியும் ஒன்று. ஒரு காலத்தில் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கிய தேயிலை இன்று அந்நிலையில்லாவிட்டாலும் அதனால் அரசாங்கம் வருமானத்தை பெறாமலில்லை. அப்படியிருக்கையில் அதற்கான பங்களிப்பை வழங்கும் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தினதும் தோட்ட நிர்வாகத்தினதும் கட்டாயக்கடமையாகும்.

மனித உரிமை, பாலின அடிப்படையிலான உரிமை என பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கும் நாம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் குறைந்த வருமானத்துடன் போராடும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை குறித்து மறந்து போயுள்ளோமா என்ற சந்தேகம் எழுகிறது. அவர்களின் வாக்குகளை பெற்று மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் இதனை ஏன் கவனிக்கத் தவறுகின்றனர்? என்று எமக்கு அடிப்படை வசதிகளாவது கிடைக்கும் என்று அங்கலாய்க்கின்றனர் இந்தத் தோட்டத் தொழிலாளர்கள்.

கருங்குழலி/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435