எங்கள் பணத்தை செலவிடுவது போன்று செலவிட முடியாது. அரச பணத்தை பயன்படுத்த பாராளுமன்ற அனுமதி தேவை. அனுமதி பெற்று பெப்ரவரி முதல் படையினருக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று (07) கொழும்பில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஓய்வூதியம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விசேட தேவைக்குரிய படையினருக்கு தற்போது மாதாந்தம் சுமார் 65,000 ரூபா வரை கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
கடந்த 2008- 2009 காலப்பகுதியில் 28 பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர். அதில் 25 பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஓய்வு பெற்ற படையினருக்கான ஓய்வு பெறல் மற்றும் போனஸ் கொடுப்பனவுக்கான சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தொடக்கம் ஓய்வூதியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட விதமாக எதிர்வரும் 2017ஆம் ஆண்டு வரவு செலவில் அதற்கான நிதி ஒதுக்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். இதனூடாக 10- 12 வருடத்திற்கிடைப்பட்ட காலம் சேவை செய்து ஓய்வு பெற்ற படையினர் உள்வாங்கப்படுவர். அவர் மேலும் தெரிவித்தார்.
எது எவ்வாறிருப்பினும் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசேட தேவைக்குரிய படையினர் மீது பொலிஸார் கண்ணீர் குண்டு தாக்குல் நடத்தி கலைக்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.