இவ்வாண்டு 20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் இத்திட்டத்தில் எவ்விதமான அரசியல் பாராபட்சங்களும் காட்டப்படாது என்று பொது நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான கனஹகே வினவிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், 2018/ 2019ம் ஆண்டுகளில் பட்டதாரிகளுக்கு இவ்வாறு நான்கு கட்டங்களாக இந்நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு இரு கட்டங்களாக 20,000 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இவ்வாறு வழங்கப்படும் நியமனங்களில் மூன்றில் ஒரு பகுதி மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு வழங்கப்படும். குறித்த தீர்மானமானது கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டதில் எட்டப்பட்டது.
பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதில் நியாயமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 66,823 பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவ்விண்ணப்பதாரிகளில் 49,919 பேர் நேர்முகத்தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளனர். மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களினூடாக நடாத்தப்படும் நேர்முகத்தேர்வுகளினூடாக சேவையில் உள்ளீர்க்கப்படும் பட்டதாரிகள் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். அவ்வாறு பயிற்சியை பெறுபவர்கள் அந்தந்த துறைகளில் நிரந்தர நியமனத்தைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.