மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுத்து பதுளை பகுதி தோட்டமொன்றைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தேயிலைத்தொழிற்சாலையை விசாரணைகள் நிறைவு பெறும் வரை மூடிவிடும்படி தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே மேற்படி பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆணையாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து மேற்படி தோட்ட தேயிலைத் தொழிற்சாலை பரிசோதனையிடப்பட்டது. அவ்வேளையில் தேயிலையை சுவையூட்டப் பயன்படுத்தப்படும் சட்ட விரோத இரசாயனத்திரவம் அங்கிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னரே குறிப்பிட்ட தேயிலைத் தொழிற்சாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 8ஆம் திகதி முதல் மேற்படி தொழிற்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் அதனை மீண்டும் திறக்கக் கோரி குறித்த தோட்டத்தின் நான்கு பிரிவுகளையும் சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு தொழிலாளர்கள் தொடர்ந்து 10 தினங்களாக பணிப்பகரிப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினால் இரசாயன சுவையூட்டி தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து தோட்ட முகாமையாளரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
வேலைத்தளம்/ வீரகேசரி