முறையாக கணித பாடத்திற்கான நியமனம் பெறாது பாடசாலைகளில் கணித பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியினை வழங்குவதற்கு கல்வி அமைச்சு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கணித பாடத்தை கற்பிப்பது தொடர்பாக உயர் சான்றிதழ் பாடநெறியொன்றை தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து கல்வியமைச்சு முன்னெடுக்கவுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி 28.2017ஆம் இலக்க சுற்றுநிரூபமொன்றை அனுப்பியுள்ளார்.
தேசிய கல்வி நிறுவகம் இந்த பாடநெறியை நடத்தி உரிய மதிப்பீட்டை மேற்கொண்டு சான்றிதழை வழங்குவதுடன், இதனை பெறும் ஆசிரியர்களுக்கு பின்வரும் வரப்பிரசாதங்கள் சுற்றுநிருபம் மூலம் கிடைக்கப்பெறும்.
இச்சான்றிதழ்பெறும் ஆசிரியர் வேறுபாட நியமனத்திற்கான ஆசிரியராகவிருந்த போதிலும் ஆசிரிய இடமாற்றத்தின் போது கணித பாட ஆசிரியராக கணிக்கப்படுவார்.
அவர் தரம் 10 – 11 வகுப்புகளில் கணித பாடம் கற்பிப்பவராயின் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கத் தகைமை கொண்டவராவார். இதனை குறித்த பாடசாலை அதிபர் பரிந்துரை செய்ய வேண்டும்.
இப்பாடநெறிக்காக ஒரு ஆசிரியரை பெயரிடும் போது போது வலயக்கல்வி பணிப்பாளர் பரிந்துரை செய்வதுடன் மாகாணக்கல்வி பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும்.
பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் திறமை சித்தி பெற்றிருத்தல் அவசியமாகும். மேலும் 6 – 11 வரையான வகுப்புகளில் குறைந்தது 5 வருடகால கணித பாட கற்பித்தல் சேவையினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
எனினும் கல்வியமைச்சின் 42.2012 சுற்றுநிருபத்திற்கமைவாக நியமனம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும் கல்விச்செயலாளரின் தீர்மானமே இறுதியானதாகும்.