அபிவிருத்தி அதிகாரிகள் சேவையில் பயிற்சி பெற்ற 14,500 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கையை 5 மாதங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இப்பட்டதாரிகள் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர். பயிற்சி காலம் நிறைவடைந்த நிலையில் இம்மாதம் முதல் வாரத்தில் அவர்கள் சேவையில் நிரந்தரமாக இணைத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் தற்போது 5 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி பெற்ற பட்டதாரிகளை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசாங்கம் பிற்போட்டுள்ளமையினால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ம் திகதி கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் எதிர்கால திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
20,000 ரூபா கொடுப்பனவிற்கு ஒரு வருட கால பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட இப்பட்டதாரிகள் தற்போது நிரந்தர நியமனம் பெற்ற அரச அதிகாரிகளின் கடமைகளை செய்து வருகின்றனர். எனவே ஏற்கனவே உறுதியளித்ததற்கமைய அவர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்.
செப்டெம்பர் மாதம் 2ம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு போராட்டத்திற்கு மேலதிகமாக பயிற்சி நிறைவு செய்த பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு இரு அரச நிறுவனங்கள் மகஜர்களை கையளிக்கவுள்ளனர் என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மூலம் – அத பத்திரிகை