பாடசாலை சீருடைத்துணி மற்றும் பாடசாலை நூலகங்களுக்கான புத்தக விநியோகத்தில் முறைகேடு செய்துள்ள அதிபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி வவுச்சர் விநியோகம் மற்றும் பாடசாலை நூலகங்களுக்கு புத்தக விநியோகம் என்பனவற்றில் அதிபர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்;ணன் கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து வௌியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார். செவ்வி வருமாறு
கேள்வி – இது தொடர்பில் உங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதா?
பதில் – ஆம். இது தொடர்பில் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் தவறான விடயம்.
கேள்வி – அப்படியாயின் இந்த விடயம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?
பதில் – இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளில் மோசடியில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய உச்சபட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
கேள்வி – உச்சபட்ச நடவடிக்கை என்றால் அது எவ்வாறானது?
பதில் – இதுபோன்ற மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவவோருக்கு எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் தாபன கோவையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி – அதிபர்களின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்னாவது?
பதில் – மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பிடவும் முடியாது. அதனை சரிசெய்யவும் முடியாது.
கேள்வி – அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும், சீருடைதுணி விநியோக முறைமை நடைமுறைக்கு சாத்தியமானதா?
பதில் – இந்த முறைமையினால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்;. அவர்களுக்கு நன்மை இல்லை. வவுச்சர் முறைமையை நிறுத்த வேண்டும்.
விலைமனுக்கோரல் பிரச்சினையின் காரணமாகவே, இந்த வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியிருந்தார். எனினும், இந்த வவுச்சர் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சினைகள் எழுந்துள்ளன.
2700 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் இந்த இலவச சீருடைத்துணி விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, அதன் பயன் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
கேள்வி – உங்களது யோசனை என்ன?
பதில் – பழைய முறைமையின்படி மாணவர்களுக்கு நேரடியாகவே சீருடை துணியை விநியோகிக்கலாம். எனவே, இந்த வவுச்சர் முறைமையை நிறுத்த வேண்டும் என என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.