பரீட்சை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
தற்போது பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு 1500 ரூபாவும் கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரியொருவருக்கு 1300 ரூபாவும் மேலதிக கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிக்கு 1200 ரூபாவும் இணைப்பு அதிகாரிக்கு 1700 ரூபாவும் புதிதாக நியமிக்கப்படும் மேலதிக பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு 1500 ரூபாவுடன் போக்குவரத்து கட்டணம் 600 ரூபா சேர்க்கப்பட்ட 2100 ரூபாவும் வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளிக்கான நாளாந்த சம்பளம் 1500 ரூபாவும் கட்டிட வேலை செய்பவருக்கு நாளாந்தம் 2500 ரூபாவும் வழங்கப்படும் நிலையில் பரீட்சை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் கூலித் தொழிலாளி ஒருவரின் அன்றாட சம்பளமும் ஒரே நிலையில் உள்ளது. ஆசிரியர் பரீட்சை கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு விரும்பாமைக்கு குறைந்த கொடுப்பனவும் ஒரு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.