சுகாதார ஆலோசனைகளுக்கமைய வழிகாட்டல்கள் வழங்கப்படாத நிலையில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் திங்கட் கிழமை (23)ம் ஆரம்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு நேற்று (19) அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வௌியிட்டபோதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்ப்பை வௌியிட்டுள்ளார்.
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் 23ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. தரம் 1- தரம் 5 மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமூக இடைவௌி உட்பட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் மாணவர்கள் பின்பற்றுவற்கான நடவடிக்கைகளை பாடசாலை அதிபர்கள் முன்னெடுக்க வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.