கிழக்கு மாகாணத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்டி பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தாம் சித்தியடைந்த நிலையில் நேர்முகத் தேர்வொன்றை நடத்தி அதில் தம்மை நீக்குவது முறையற்றது எனத் தெரிவித்து சுமார் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கானபோட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோர்களில் 222 பேருக்கு நேற்று முன்தினம் நியமனங்கள் (20)வழங்கப்பட்டன. அவ்வேளை நியமனங்கள் கிடைக்காதவர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அத்துடன் நியமனம் வழங்கும் நிகழ்விற்கு பின்னர் தாம் முதலமைச்சர் அலுவலகத்தில் பட்டதாரிகளை சந்திப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்தார்.
இதற்கமைய, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை நேற்று (21) மாலை தமது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் அனைத்து விபரங்களையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்டி பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பாதிக்கப்பட்ட பட்டதாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.