அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை மலையடி கண்ட விவசாயிகள் வேளாண்மை செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏன் இந்த பாரபட்சம், நீரை உடன் வழங்கு, எங்களின் பொருளாதாரத்தை நசிக்காதே, நல்லாட்சி அரசே எங்களை வாழவிடு போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மலையடிக் கண்ட விவசாய அமைப்பின் தலைவர் எம்.ஐ.ஹபீப் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையடிக் கண்ட பிரதேசத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை பண்ணுவதற்கான கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டு விதைப்பு வேலைகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மே முதலாம் திகதிக்குள் முடிவுறுத்தப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய விவசாயிகள் வேளாண்மை செய்வதற்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் விதைப்பதற்கான நீர் வாய்க்காலில் வராமல் தடுக்கப்பட்டு நீர் வரும் வாய்க்காலின் வான்கதவும் நீர்ப்பாசன அதிகாரிகளினால் செவ்வாய்யன்று மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆண்டாண்டு காலமாக வேளாண்மை செய்கையில் ஈடுபட்ட நாங்கள் தற்போது அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், நீரை வழங்குமாறும் கோரியே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.
மலையடிக் கண்ட பிரதேசத்தில் 315 ஏக்கரில் வேளாண்மை செய்வதற்கு ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ வீரகேசரி