பிள்ளைகளின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்!

இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்புத் தினம். பட்டாம்பூச்சிகளாய் துன்பமறியாது, வாழ்க்கையின் சுமையறியாது பறந்து திரியும் அழகான வயது. அம்மா, அப்பா, சகோதரர்கள், நண்பர்கள், பாடசாலை, விளையாட்டு என்று ஒரு சிறிய வட்டத்துக்குள் அனைத்து மகிழ்ச்சியையும் அனுபவிக்கும் வயது, ஆனால் இந்த சந்தோசம் அனைத்து சிறுவர்களுக்கும் கிடைத்து விடுகிறதா? இல்லை, இன்றைய திகதிக்கு உலகில் சுமார் 152 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)

உலகில் சிறுவர்கள் தொழிலாளர்களாக பயன்படுத்துவதை இல்லாதொழிக்கவும் அதற்கான மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் கடந்த 2002ம் ஆண்டு உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்புத் தினத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு பிரகடனப்படுத்தியது. அதற்கமைய கடந்த 2002ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு ஜூன் மாதம் 12ம் திகதியும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகளில் உள்ள அரசாங்கங்கள், தொழில் வழங்குநர்கள், தொழிலாளர்கள் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மில்லியன் கணக்கான பொது மக்களை ஒன்றிணைத்து சிறுவர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்வதும் கடந்த 2005ம் ஆண்டுபேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் ஏற்றுக்கொண்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறான கொள்கைரீதியான செயற்பாடுகளினூடாக சிறுவர் தொழிலாளர் முறையை இல்லாதொழிப்பதே நோக்கமாகும்.

‘குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்கு கொண்டுவருவோம் – அவர்களின் எதிர்கால கனவுகளை நனவாக்குவோம்’ என்பதே இவ்வருட சிறுவர் தொழிலாளர் எதிர்ப்புத் தின தொனிப்பொருளாகும்.

உலக அளவில் சிறுவர் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால் அனைத்து துறைகளிலுமே சிறுவர் தொழிலாளர்கள் இருக்கின்றனர், எனினும் பத்தில் 7 பேர் விவசாயத்துறைகளிலேயே பணியாற்றுகின்றனர் என்கிறது ILO.

இலங்கையில் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் பார்ப்போமாக இருந்தால், இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உதவி இலக்கமான 1929 ஆண்டு ​தோறும் சுமார் 9,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அதில் சுமார் 1,500 முறைப்பாடுகள் கட்டாய கல்விக்கான சட்டங்களை மீறியதாக உள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு கட்டாய கல்வி வழங்கப்படவேண்டும் என்று அரசியலமைப்பில் இருந்தாலும் கூட அது எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை  தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது. அவையாவன…

உடல் ரீதியான பாதிப்பு
உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்
உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

உடல் ரீதியான பாதிப்பு

கொடிய வறுமை, உட்டசத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன.

உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்

சிறார் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க தேவையான பயிற்சி வழங்கல், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கல், பாடசாலைகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தல் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படுத்துகிறது. ஆனால் அது மட்டுமே போதுமா?

குழந்தைகள் உங்களில் பிறந்தார்கள் என்றாலும் அவர்கள் உங்களுக்காக மட்டுமே பிறக்கவில்லை. அவர்களை முழுமையாக ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு உங்களை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாது என்று பெற்றோருக்கு உணர்த்த வேண்டும் பிள்ளைகளுக்கேயான தனியான உணர்வுகள், தேவைகள், ஆசைகள், கனவுகள் உள்ளன. அவற்றை முழுமையாக நிறைவேற்ற முடியாவிடினும் அவர்களுக்கான அடிப்படை விடயங்களையாவது சிறப்புற வழங்கவேண்டும் என பெற்றோருக்கு உணர்த்தவேண்டும். பெற்றோர் உணரவேண்டும்

இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சிறுவர்கள் வறுமையின் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெருந்தோட்டங்கள், வசிக்கும் சிறுவர்கள், பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் கொழும்பு போன்ற நகரப்பகுதிகளில் சேரிப்புறங்களில் வசிக்கும் சிறுவர்கள் வறுமை, சூழ்நிலைகள் காரணமாக சிறுவர் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஓரளவுக்கு பரவாயில்லை என்றபோதிலும் பாதிப்புக்கள் இல்லையென்று கூற முடியாமையே துரதிஷ்டவசமானது.

எனவே, அரசாங்கம் 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் அவர்களுடைய கல்வியை உறுதிப்படுத்துவதற்கு முறையான திட்டத்தை செயற்படுத்துவதுடன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு கடுமையான சட்டங்களையும் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இத்தகைய பாதிப்புக்களில் இருந்து மீள முடியும்.

நன்றி- இணையம்

ஆர்த்தி பாக்கியநாதன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435