
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து கொடுப்பது முடியாத காரியம் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேயிலை சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அடுத்த முறை வேதன அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை இடம்பெறும் போது அந்த ஐம்பது ரூபாயையும் சேர்த்து அதன் அடிப்படையிலேயே வேதனை அதிகரிப்பு கோரப்படும்.
அது முதலாளிமார் சம்மேளனத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தாம் வழங்குவதாக ஒப்புகொண்ட 600 மில்லியன் ரூபாவை வழங்க தயாராக இருக்கின்ற போதும் திறைசேறி வழங்குவதாக ஒப்புக்கொண்ட 600 மில்லியன் ரூபாவும் சேர்த்து வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த தொகையை வேதனத்தோடு அல்லாமல் வேறு ஏதேனும் ஒரு வகையிலேயே வழங்க முடியும்.
அதேநேரம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேயிலை ஏற்றுமதியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைச்சர்களின் செலவினங்களை 15 சத வீதத்தால் குறைக்குமாறு திறைசேரி அறிவித்திருக்கிறது.
ஏப்ரல்21 தாக்குதலுக்குப் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து வழங்குவது கடினமான காரியம். அதற்கு தம்மால் இணங்க முடியாது.
இதனை தாம் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காணொளி