புகையிரத திணைக்களத்தில் நிலவும் 152 வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டமை நியாயமற்ற செயல் என்றும் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் திணைக்களத்தின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.
மேற்கூறப்பட்ட வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய கடைசி திகதி கடந்த 20.08.2016 அன்று ஆகும். ஒருங்கிணைந்த சேவை பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வெற்றிடங்கள் நிரந்தர சேவையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அரச வர்த்தமானி அறிவித்தல் மற்றும் தேசிய பத்திரிகைகளினூடாக விளம்பரப்படுத்தப்படுவது அவசியம். எனினும் அவ்வாறின்றி வெறுமனே இணையதளத்தினூடாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமை நியாயமற்ற செயல் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இணையளத வசதியற்றவர்கள் இவ்வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் வாய்ப்பை இழந்திருப்பர். இதனூடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் திணைக்களத்தின் மோட்டார் வாகன ஓட்டுநர் பதவி வெற்றிடங்களுக்கும் இவ்வாறே செய்தனர். புதிய ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் போது 20 வீதமான வாய்ப்பு அங்கு ஏற்கனவே பணியாற்றுபவர்களுக்கு வழங்கி முறையாக ஊழியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறும் அச்சங்கம் கோரியுள்ளது.
வேலைத்தளம்