பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கைச்சாத்திட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் மாநாடு நேற்று கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தேவைகளை உறுதிப்படுத்துவது தொடர்பான கொள்கைகள் மற்றும் அவற்றுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தத்தில் அனைவரின் முன்னிலையிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.
அவரால் கையெழுத்திடப்பட்ட சமூக ஒப்பந்தம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இனங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
நாட்டில் சுமார் 12 இலட்சம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. அப்பெண்களின் துன்பங்களைப் போக்குதல், அவர்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றுக்கான செயற்திட்டங்களை உருவாக்குவோம்.
எமது புதிய அரசாங்கத்தில் பாலின சமத்துவமின்மையைப் போக்கி, அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம இடத்தைப் பெறக்கூடியதொரு நிலையைக் கட்டியெழுப்புவோம். அதற்குரிய திட்டத்தை நான் ஜனாதிபதியாகப் பதவியற்றதைத் தொடர்ந்துவரும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்துவதாகவும் இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார்.