பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள், வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க விசேட நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார் உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்ட முகாமையாளருமான யோகேஸ்வரி கிருஷ்ணன்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘வேலைத்தளம்’ இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கருத்தை முன்வைத்துள்ளார்.
கேள்வி – உங்கள் பணியிடத்தில் மற்றும் துறைசார் பணிகளில் பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் என்ன?
பதில் – பால்நிலை சமத்துவமின்மை மற்றும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் என்பன குடும்பம் முதல் வேலைத்தளங்கள் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ளன. உடல், உள மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறைகள் தொடர்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பால்நிலை சமத்துவமின்மை என்பன குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப வன்முறையால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளின்போது பெண்கள் வார்த்தைகளால் துன்புறுத்தப்படுகின்றனர். உடல்ரீதியான காயங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர், பெண்கள் விரும்பாத சந்தர்ப்பங்களில் அவர்கள் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவது முதலான நிலைமைகள் உள்ளன.
சமூக கட்டமைப்பை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து செய்யும், பேருந்துகள் முதல் தொழில் இடங்கள்வரை வன்முறைகள் தொடர்கின்றன.
தொழில்துறை பெண்களை எடுத்துக்கொண்டால், ஸ்தாபனமயக்கப்பாட்ட பெண்கள் தொழிலாளர்கள், ஸ்தாபனமயமாக்கப்படாத பெண் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழில்துறை பெண்கள் என தொழிலாளர்கள் மூன்று வகைப்படுத்தப்படுகின்றனர். அவர்களில் மலையகத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஸ்தாபனமயமாக்கப்படாத பெண் தொழிலாளர்களாக உள்ளனர். ஆடைத் தொழிற்சாலை, பிஸ்கட் மற்றும் சொக்கலட் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த வகுதிக்குள் அடங்குகின்றனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக முறைசாரா தொழிலாளர்களாக வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் வீட்டை மையப்படுத்தி இடம்பெறும் தொழிலில் ஈடுபடுபவர்கள், கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களுள் ஸ்தாபனமயமாக்கப்படாத தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை. எனவே, தொழிற்சங்கமானது அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
உதாரணமாக அவர்களின் உரிமைகள் என்ன என்பதே வகைப்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன வழங்கப்படுவதில்லை.
கேள்வி – இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
பதில் – ஸ்தாபனமயப்படாத தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம். அவர்கள் தொழிற்சங்க உரிமையற்றவர்களாக இருக்கின்றனர். பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர் யுவதிகள் வெளி இடங்களில் பணிபுரிகின்றனர். தொழிற்சங்கத்தில் அங்கத்தவர்களாக இருந்தால்தான், அவர்கள் தமது தொழில் உரிமைகளை அனுபவிக்கலாம். அவற்றைப் பற்றி பேசலாம். அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில், நாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். அவர்களை சங்கத்தில் அங்கததவர்களாக்கி, அவர்களின் தொழில்துறையில் இடம்பெறும் பிரச்சினைகளை அடையாளம் காண்கின்றோம். அவர்கள் முன்வைக்கும் அந்தப் பிரச்சினையை தொழில் திணைக்களத்திடம் முன்வைத்து, மறுக்கப்பட்டுவரும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பது எமது பிரதான பணியாக உள்ளது.
அடுத்ததாக வீட்டுப் பணிப்பெண்களை எடுத்துக்கொண்டால், அதாவது வெளிநாடுகளில் தொழில்செய்பவர்களாகவும், உள்நாட்டில் தொழில்செய்பவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் நாட்டின் தேசிய சட்டதுக்குள் உள்வாங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்குரிய சட்ட அங்கீகாரங்களை வழங்க வேண்டும் என்றும், தொழிற்சட்டங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும் நாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றோம்.
கேள்வி – இந்தத் துறைக்குள் நீங்கள் வருவதற்கு காரணமாய் அமைந்த பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?
பதில் – எனது தந்தை தோட்டத்தில் ஒரு ‘கிளாக்’ ஆக பணியாற்றினார். நான் ஒரு ஆங்கில ஆசிரியராகவோ அல்லது தோட்ட நிர்வாகத்தில் ஒரு உயர்பதவியை வகிக்க வேண்டும் என்றே அவர் எண்ணம் கொண்டிருந்தார். நானும் அதே இலக்குடன் எனது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்;தேன்.
எனினும், உயர்தரக் கல்வியை நிறைவுசெய்த பின்னர் எனது பட்டப்படிப்பை தொடர்வதற்கு முன்னர், அதிபர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலையொன்றில் தொண்டர் ஆசிரியராக எனது பணியை ஆரம்பித்தேன். அதன்போது மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
இதையடுத்து, கண்டியில் உள்ள சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணியை ஆரம்பித்த பின்னர், மலையக மக்கள், குறிப்பாக வறிய மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்பான பிரச்சினைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
பின்னர் இந்தத் துறையில் பணியை தொடர்ந்து, பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேடமாக கவனம் செலுத்தி அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டேன். மக்களுடனேயே தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து, அவர்களின் பிரச்சினைகளை நேரில் பார்த்து, அதில் மாற்றங்களை ஏற்படுத்து வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பணியை தொடர்கின்றேன்.
கேள்வி – நீங்கள் அல்லது உங்கள் துறைசார் பணியாளர்கள் இந்தத் துறையில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் அல்லது நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுகின்ற நிலைமைகள் இருக்குமாயின், அதைப்பற்றி சுருக்கமாக கூற முடியுமா?
பதில் – பெண்களின் உரிமைகள் மீறப்படுதல் மற்றும் அவர்கள் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பன தொழில் இடங்களில் பரவலாக இடம்பெறுகின்றன.
பெண்களின் மேற்பார்வையாளர்களாகவும், அவர்களுக்கு மேலதிகாரிகளாகவும், செயற்படுபவர்களாக ஆண்களே இருக்கின்றனர். அவர்கள் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் அனுகுகின்றனர். அதற்கு பெண்கள் இணங்காவிட்டால், தொழில்ரிதீயாக பெண்களை பழிவாங்குகின்றனர்.
மேலதிகாரிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பெண்களை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கும் நிலைமை உள்ளது. பெண்கள் அதிகளவில் பணிபுரியும் இடங்களில் பெண்களே மேற்பார்வையாளர் பதவிகளில் இருக்க வேண்டும்.
அடுத்தாக பாலியல் இலஞ்சம் பெறும் நிலைமையானது பரவலாக காணப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்த, அரசியல் கட்சிகளால் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி, பெண்கள் ஏதாவது ஒரு இடத்துக்கு தொழில்புரிய செல்லும்போதும், அவர்கள் தமது பிரச்சினைகளைப் பற்றி பேசும்போதும், தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள போகும்போது சம்பந்தப்பட்ட இடங்களில் பாலியல் இலஞ்சம் கோரப்படுகிறது. பாலியல் இலஞ்சம் கேட்பது தற்போது சாதாரணமான விடயமாக இடம்பெற்று வருகிறது. அரச நிறுவனங்களில் கூட இந்த நிலைமை காணப்படுகிறது.
கேள்வி – மாற்றத்திற்கான உங்களின் பரிந்துரைகள் என்ன?
பதில் – கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் அமைப்பு மறுசீரமைப்பின்போது நாம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். அதாவது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையே எம்மால் முன்வைக்கப்பட்டது.
ஏனெனில், பொதுவான நீதிமன்றங்களில், பெண்கள் தமக்கு இடம்பெற்ற பாலியல் வன்முறை தொடர்பில் வெளிப்படையாக பேச முடியாத நிலைமை உள்ளது. அதுமட்டுமன்றி, பொதுவான நீதிமன்றங்களில் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதால், வழக்குகள் தாமதமடைகின்றன.
எனவே, வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டணை வழங்குவது முக்கியமானதாகும். அதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படட வேண்டும்.
அடுத்ததாக தற்போதைய நிலைமையில் மக்களுக்கு ஏற்றவாறு சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். குறைகேள் அதிகாரிகளாக பெண்கள் பதவிவகிக்க வேண்டும்.
மொழிப் பிரச்சினை உள்ளதால், பொது நிறுவனங்களில், குறிப்பாக காவல் நிலையங்களில், மொழிப் பிரச்சினை இருப்பதால் பெண்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளை முழுமையாக சொல்ல முடியாத நிலைமை உள்ளது. தற்போது நாட்டில் மொழிக் கொள்கை தொடர்பாக தனியான அமைச்சு ஒன்று இருக்கின்றபோதும், அந்தப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. எனவே, இவை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாகும்.
நாட்டின் தொழிற்படையை எடுத்துக்கொண்டால், நூற்றுக்கு 52 சதவீம் பெண்களே உள்ளனர். எனினும், தொழில் இடங்களில் அவர்களின் பிரச்சினைகளை எடுத்துச்சொல்ல ஒரு அதிகாரியோ அல்லது ஒரு கட்டமைப்போ இல்லாத நிலைமையே இன்றும் உள்ளது.
குறிப்பாக பெருந்தோட்டத் துறையை எடுத்துக்கொண்டால், அங்கு தொழில் செய்பவர்களாக பெண்களும், அவர்களை மேற்பார்வை செய்பவர்களாகவும், உயர் அதிகாரிகளாவும் ஆண்களே உள்ளனர்.
பெண்கள் தமது பிரச்சினைகளை தொடர்பில் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய வேண்டுமாயின், ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் நகர்ப்புறங்கில் இருப்பதால், அவர்கள்; போக்குவரத்து செய்வதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஏனெனில், மலையகத்தின் பெரும்பாலன பகுதிகளில்; \போக்குவரத்து சேவை உரிய முறையில் இல்லை.
அத்துடன், காவல் நிலையங்களில் அவர்களுக்கு மொழிப் பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே, பெண்கள் எதிர்நோக்கும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களின் தொழில் இடங்களில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறாக தோட்ட நிறுவனங்கள் முதல், ஒவ்வொரு சமூக கட்டமைப்பிலும், நிர்வாக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சட்ட கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்ட முகாமையாளருமான யோகேஸ்வரி கிருஷ்ணன்.