நாட்டில் இருக்கும் குப்பை பிரச்சினையை கருத்திற்கொண்டு அதற்கு பொருத்தமான இடமொன்றை ஒதுக்கியிருந்தால் வரவேற்கத்தக்கது, அதனை விடுத்து போராட்டம் நடத்துவதற்கான இடமொன்றை ஒதுக்கியுள்ளமை வேடிக்கையானதாகவும் கேலிக்குரியதாகவும் உள்ளது என்று இலங்கை தோட்டச் சேவையாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சௌந்தராஜன் சந்திரமதன் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்துவதற்கென தனியிடத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை தொடர்பில் எமது இணையளத்திற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்களை நடத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. அது பாராட்டத்தக்க விடயமே. எனினும் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் அதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் தொழிற்சங்கங்குக்குள்ள பிரச்சினைகள் குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கும் உணர்த்துவதற்கும் போராட்டங்கள் நடத்தவேண்டியுள்ளது.
நாம் தோட்டச் சேவையாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கிறோம். எமக்கும் தோட்டக் கம்பனிக்கும் இடையில் பிரச்சினை இருக்குமானால் அதற்கு கொழும்பிலுள்ள காலிமுகத்திடலில் சென்று போராட்டம் நடத்துவதில் என்ன பிரயோசனம்? நாம் பிரச்சினைக்குரிய கம்பனியில் முன்பாகதான் போராட்டம் நடத்தவேண்டும். எமது எதிர்ப்பை நாம் செய்யும் வேலைகளை நிறுத்துவதனூடாகவோ அல்லது செயற்பாட்டுக்கு இடையூறு விளைவிப்பதனூடாகவோதான் காட்ட முடியும். நாம் வௌிப்பிரதேசங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, காலி முகத்திடலுக்குச் சென்று கடுமையான வெய்யிலில் போராட்டம் நடத்துவதால் பயன் உண்டா? நாம் களைப்படைவதுடன் எங்களுக்கு வீண் செலவுதான் ஏற்படும்.
இது ஜனநாயக நாடு. எமக்கு விரும்பிய இடத்தில் போராட்டம் செய்வத எமது உரிமை என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும். இன்று இடத்தை மட்டும் ஒதுக்கியுள்ளார்கள். இன்னும் சில மாதங்களில் அதனை பாராளுமன்றில் சமர்ப்பித்து சட்டமாக்க முனைவார்கள். அவ்வாறு அவர்கள் செய்யும்பட்சத்தில் தொழிற்சங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவற்றின் செயற்பாடுகளை முடக்க ஏதுவாக அமையும்.
அவ்வாறான ஒரு நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்குமாக இருந்தால் எமது சங்கம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தயங்காது என்றும் சந்திரமதன் தெரிவித்தார்