பெருந்தோட்டத்துறையில் குறைந்த வருமானத்தைக் கொண்ட பயனாளிகளுக்காக புதிய வாழ்க்கை வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் கடன்தொகை 10 இலட்சம் ரூபாவிலிருந்து 15 இலட்சம் ரூபாவரை அதிகரிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கடன் தொகையில் 52 சதவீதம் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரினால் செலுத்தப்படுவதுடன், அது 4 சதவீத வட்டிக்கும் 20 வருட காலப்பகுதியில் மீள செலுத்தும் காலத்திற்கும் உட்பட்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண,
குறைந்த வருமானம்பெறும் மக்களுக்கு வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பயன்பெறும் மக்களுக்கு கிடைக்கும் 10 இலட்சம் ரூபா கடனுதவியை 15 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் தொகையில் 52 வீதத்தை வீட்டு உரிமையாளர் செலுத்த வேண்டும், 0.4 வீத சலுகைக் கடனாக 20 வருடங்களில் செலுத்தும் வகையில் இந்தக் கடன் வழங்கப்படுகின்றது.
தோட்டப்பகுதிகளில் வாழும் குறைந்த வருமானம்பெறும் மக்களுக்காக இந்திய கடனுதவியுடன் வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதில் உள்ளடக்கப்படாதவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.