பெருந்தோட்டங்களின் பராமரிப்புகள் மற்றும் அவற்றில் நிலவும் நிர்வாக சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளை – பசறை டெமேரியா தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பெருந்தோட்டங்கள் அனைத்தும் நிறுவனங்களுக்கு சொந்தமானது அல்ல. அரசாங்கத்திற்கே சொந்தமானது. இலங்கையின் தேயிலை உற்பத்தியில் ‘சிலோன் டி’ என்ற பெயர் உலக பெயர் பெற்றது. இதனை உருவாக்கியவர்கள் இந்த தோட்ட தொழிலாளர்களே. இவ்வாறான இத்துறையை பாதுகாக்க தேயிலை ஆராச்சி சபை திருத்த சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டமை மலைக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகின்றேன். இதன் மூலம் தேயிலை உற்பத்தி அபிவிருத்திகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என நம்புகின்றேன்.
தேயிலைத்துறை பாதுகாக்கப்படவேண்டுமானால் தேயிலைதுறையில் இருக்கும் தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சேவை நலன்களும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சிகள் மூலம் தேயிலை உற்பத்தி அதிகரிக்கபடவும் வேண்டும். தற்போது சில நிறுவனங்கள் இலாப நோக்கத்திற்காக தேயிலை உற்பத்தியில் கலப்படங்களை மேற்கொள்கின்றனர்.
சில தனியார்கள் கழிவு தேயிலையை மீள் உற்பத்தியில் பயன்படுத்தி தேயிலை உற்பத்திகளை மேற்கொள்கின்றனர். இதனால் சிலோன் தேயிலைக்கு உலக சந்தையில் உள்ள கேள்வி பின்னடைவை நோக்கி செல்கின்றது. இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் மிகவும் கஸ்ட்டப்பட்டு தேயிலைக்கு உரிய இடத்தை உலகலாவிய ரீதியில் பெற்றுக் கொடுக்கும் வேலையில் சிலர் செய்யும் முறையற்ற செயற்பாடுகளினால் முழு தேயிலை உற்பத்திக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது.
இந்நிலையில் தேயிலை உற்பத்திதுறையை பாதுகாக்க அமைச்சின் பெருந்தோட்ட கண்காணிப்பு பிரிவின் மூலம் திடீர் கண்காணிப்புக் குழு அமைக்கபட்டு திடீர் திடீர் என தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகளையும் தோட்டங்களையும் தொழிலாளர்சார் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து தேயிலைத்துறையை பாதுகாக்க உள்ளது.
அதேபோல் தற்போது தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள தேயிலை காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு பிரித்து கொடுத்து அவர்களையும் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படவுள்ளன. இந்த நாட்டின் தேயிலை உற்பத்தியில் சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மூலம் 75 சதவிமும் 25 சதவிதம் 22 கம்பனிகளிடம் இருந்தும் பெறப்படுகின்றது.
நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் அது காணப்படாமை கவலைக்கறியது. இதனாலேயே பெருந்தோட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான உரிய தீர்வு எதிர்காலத்தில் எட்டப்படும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளளேன் என்று கூறினார்.